இறுதிக் கட்டத்தில் தேவதியாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் தடுமாறிய நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி 154 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 15 ஆவது போட்டி இன்று பிற்பகல் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே அபுதாபியில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீரமானித்தது. அதன்படி ஆரம்ப துடுப்பட்ட வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித்தும், ஜோஸ் பட்லரும் களமிறங்கினர். 

பெங்களூரு அணி சார்பில் முதல் ஓவருக்காக இசுறு உதான பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள ராஸ்தான் அணி அந்த ஓவரில் ஒன்பது ஓட்டங்களையும், இரண்டாவது ஓவரின் முடிவில் 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

அதன் பின்னர் மூன்றாவது ஓவருக்கா பந்தை பரிமற்ற இசுறு உதான மீண்டும் பந்தை கையில் எடுக்க, அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸரையும், அடுத்த பந்தில் பவுண்டரியையும் விளாசித் தள்ளானர் பட்லர்.

எனினும் உதான அந்த ஓவரின் நான்காவது பந்து வீச்சில் ஸ்டீவ் ஸ்மித்தை 5 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து இலங்கை கிரிக்கெட்டின் பெயரை காப்பாற்றினார்.

ஸ்மித்தையடுத்து பட்லரும் 22 ஓட்டங்களுடன் 3.1 ஓவரிலும், சஞ்சு சம்சன் 4 ஓட்டத்துடன் 4.1 ஆவது ஓவரிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ராஜஸ்தான் அணி 31 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் 4 ஆவது விக்கெட்டுக்காக ரோபின் உத்தப்பா மற்றும் மஹிபால் லோமர் பெங்களூருவின் பந்து வீச்சுகளுக்கு தாக்குப் பிடித்து நிதானமாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்தனர்.

இதனால் ராஜஸ்தான் அணி 10 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 70 ஓட்டங்களை குவித்தது. உத்தப்பா 17 ஓட்டங்களுடனும், லோமர் 22 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இந் நிலையில் 11 ஆவது ஓவரின் முதல் பந்தில் உத்தப்பா சஹாலின் சுழலில் சிக்கி உதானவிடம் பிடிகொடுத்து நடையை கட்ட, அடுத்து களமிறங்கிய ரியான் பராக்கும் 16 ஓட்டத்துடன் உதனாவின் பந்து வீச்சில் பிஞ்சிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் (105-5).

ராகுல் தேவதியா களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 17 ஆவது ஓவரின் நான்காவது பந்தில் ராஜஸ்தான் அணி சார்பில் சற்று நிலைத்தாடிய லோமர் 47 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஜோப்ர ஆர்ச்சர், தேவதியாவுடன் களமிறங்கி அதிரடியாக துடுப்பெடுத்தாடி வர ராஜஸ்தான் அணி 19 ஓவர் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.

இறுதியாக ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.

தேவதியா 12 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 24 ஓட்டங்களுடனும், ஆர்ச்சர் 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.