(எம்.மனோசித்ரா)

நாட்டினதும் மக்களினதும் நன்மை பற்றி ஆராய்ந்த பின்னரே நாம் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுப்போம். மாறாக இனவாதிகளுக்கு அச்சமடைந்து எவ்வித தீர்மானங்களையும் எடுப்பதில்லை. 

எனது சகோதரர் விடுதலை செய்யப்பட்டமைக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

சகோதரரை விடுதலை செய்தால் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக ரிஷாத் பதியுதீன் அரசாங்கத்திடம் தெரிவித்திருக்கக் கூடும் என்று நாம் சிங்களவர் என்று அமைப்பு தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறு கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். எனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் நியாயமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டார். 

அவை நிரூபிக்கப்படாமையால் ஐந்தரை மாதங்களின் பின்னர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் விடுதலை செய்யப்பட்டமைக்கும் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களால் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இது மோசமானதொரு சம்பவமாகும். 

இது போன்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்போது அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்.

அதனடிப்படையிலேயே என்னுடைய சகோதரர் மீது போலி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும், அவர் கைது செய்யப்பட்டபோதும் நாம் எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடவில்லை. 

அவர் நியாயமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதால் நிச்சயம் விடுதலையாவார் என்ற நம்பிக்கை எமக்கிருந்தது. 

அதற்கேற்ப அவர் கைது செய்யப்பட்டவர்களாலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்கும் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. நாடு மற்றும் மக்களின் நன்மைகளை அடிப்படையாகக் கொண்டே நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியல் தீர்மானங்களை எடுத்துள்ளோம். 

மாறாக ' நாம் சிங்களவர் ' என்ற அமைப்பை போன்ற இனவாதிகளுக்கு பயந்து அல்ல என்றார்.