இலங்கையைப் பொறுத்தமட்டில் அதிர்ஷ்டவசமாக  கொரோனா தொற்று இல்லாத போதிலும் அதிலிருந்து முழுமையாக நாடு விடுதலை பெறவில்லை. 

தொடர்ந்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா தொற்று தொடர்ந்து புரட்டிப் போட்டு வருகின்றது.

இதனிடையே கொரோனா எவரையும் விட்டுவைக்கவில்லை என்பதை போன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இதுவே நேற்றைய தினம் பேசுபொருளாக காணப்பட்டது. 

அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகரான ஹோப் இட்ஸ் என்பவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜனாதிபதி  ட்ரம்பிடமும் அவரது மனைவி மெலனியாவிடமும்  குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. 

இதில் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடன் போட்டியிடுகிறார். 

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இருவரும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அண்மையில் இருவரும் பகிரங்க மேடையில் விவாதத்தில் ஈடுபட்டனர். தனக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று குறித்து ட்ரம்ப் ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தினார். தனிமைப்படுத்தல் செயல்முறைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

கொரோனா ஆரம்பித்த நாள் தொடக்கம் இன்றுவரை மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்த தலைவராகவே ட்ரம்ப் காணப்படுகின்றார்.

இதன் காரணமாக சீனா அவரை கடுமையாகத் தாக்கிப் பேசி அறிக்கையிட்டும் வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் கடும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு இருந்தார் ட்ரம்ப். பென்சில்வேனியா கிளிவ்லேன்டில் நடந்த விவாதம், மினசோட்டாவில் நடந்த பிரசாரம் என்பவற்றுக்கு  அவர் ஹோப் ஹிக்ஸூடன் பயணித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

இதேவேளை, இந்திய பிரதமர் மோடி உட்பட உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் ட்ரம்ப் துரிதமாக நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். 

சகல வழிகளிலும் முழுமையான பாதுகாப்பு, சுகாதார வசதிகளுடனும் காணப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியே தொற்றுக்கு ஆளாகி உள்ளார் என்றால், நாம் எவ்வளவு தூரம் அவதானமாக இருக்க வேண்டும் என்பதும் எந்த வகையிலும் அதனை அலட்சியமாக கருதிவிடக் கூடாது என்பதும் இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

ஏற்கனவே பல்வேறு பிரபலங்கள் கொரோனாவுக்கு இலக்காகி குணமாகி உள்ளனர் .பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன், அமிதாப்பச்சன் ஐஸ்வர்யாராய் எனப் பலரைக் குறிப்பிடலாம்.

அந்த வரிசையில் பிரபல பின்னணிப் பாடகர் எஸ் .பி. பாலசுப்பிரமணியம்கொரோனா காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறுதியில் மாரடைப்பினால் காலமானார் .

இதேபோல கொரோனா பல்வேறு வகையில் வீரியம் அடைந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது .

மேலும் ரஷ்யா, சீனா, அமெரிக்கா இந்தியா, பிரிட்டன் என பல்வேறு நாடுகளும் அதற்கு எதிரான மருந்துகளை கண்டுபிடித்து உள்ளதாக கூறப்படும் நிலையில், அவை அனைத்தும் இன்னும் சோதனை கட்டத்திலேயே இருந்து வருகின்றன. 

தடுப்பு மருந்துகள் பாவனைக்கு வர மேலும் சில மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

இதேபோல உலகளாவிய ரீதியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 48 இலட்சம் ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் டிரம்ப்தொடர்ச்சியான காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே, தொடர்ந்து கொரோனா தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பதுடன் சுகாதார பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.  இன்றேல் இரண்டாவது அலையில் நாமும் சிக்க வேண்டியிருக்கும் என்பதையும் மறந்து போகக்கூடாது.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்