இயற்கையின் கோரப்பிடிக்குள் சிக்கிய சிங்கார சென்னை, வெள்ள நீரில் மூழ்கி சிதைந்து போனது. பல இலட்ச உயிர்கள் நீரில் தத்தளித்தன. சுமார் 272 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இவ்வாறு தமிழகத்தையே ஆட்டிப் படைத்த கொடுர மழையில் சிக்கிய மக்களின் சோகச் சுவடுகளை மறைப்பதற்கு இந்திய அரசு முழுவீமூச்சுடன் செயற்பட்டு கொண்டிருகின்றது. பல வழிகளில் நிவாரணங்களும் சென்றடைந்து கொண்டிருக்கின்றன.

இந்த அடை மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதித்தன. அதில் எப்போதும் இல்லாத அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. 

 ஆற்றோரங்களிருந்த குடிசைகள் மட்டுமல்ல நகரின் மையப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 10 இலட்சம் வீடுகளுக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடுகளில் வசித்த சுமார் 40 இலட்சம் பேர் அரசு ஏற்பாடு செய்த பள்ளி, கல்லூரிகள், மாநகராட்சி திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. படுகாயமடைந்த பல்லாயிரம் கணக்கான மக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. 

இத்தகைய சோக சம்பவத்தில் சில கோமாளித்தனமான சம்பவங்களும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குடிமகன்கள்

அதாவது சென்னை நகரமே வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தது. பல இலட்ச மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீர் இன்றி, உடுத்த உடைகள் இல்லாமல், வீடுகளை இழந்து எங்கே போய் தங்குவது என செய்வதறியாது சோகத்தில் மூழ்கியிருந்தனர்.

இவ்வாறு மக்கள் அடிப்படை தேவைகளுக்காக தவித்த நேரத்திலும் கழுத்தளவு தண்ணீரையும் பொருட்படுத்தாமல் மதுபான சாலையின் உரிமையாளர்கள் மதுபானசாலைகளை திறந்து வைத்திருந்துள்ளனர். சில குடிமகன்கள் மதுபானசாலையை நாடி நீந்திச் குடித்து போதையாகியுள்ளனர்.

மக்களை மீட்க வாகனம் வரமுடியாத நிலையில் மதுபானசாலைகளுக்கு மாத்திரம் எவ்வாறு மதுபான போத்தல்கள் கொண்டு வரப்படுகின்றது? இவ்வாறான ஒரு நேரத்தில் இந்த மதுபானசாலைகள் திறக்கப்பட வேண்டுமா என்ற கேள்விகளே மிஞ்சின. பதில் மனிதாபிமானம் இல்லாத அவர்களிடத்தில்..?

ஊடகம்

தமிழகத்தை தண்ணீரால் தரைமட்டமாக்கிய அடை மழையின் உண்மைத் தகவல்களை வழங்குவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகித்திருந்தன.

சில ஊடகவியலாளர்கள் சம்பவ இடங்களுக்குச் சென்று தன்னுயிரை துச்சமாக நினைத்து அங்கு நடக்கும் களநிலவரங்களை உடனுக்குடன் கொட்டும் மழையில் வெள்ள நீருக்குள் நின்று கொண்டு தந்தனர். 

இது இவ்வாறு இருக்கையில், இந்தியாவில் உள்ள ஒரு தொலைக்காட்சி ஊடகம் கோமாளித்தனமாக செய்திகளை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

அதாவது, குறித்த ஊடகத்தில் வெளியான செய்தி பாதிக்கப்பட்டவர்களை மாத்திரம் அல்லாது பார்ப்பவர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த ஊடகத்தில் செய்தி வாசிப்பவர் சம்பவ இடத்திற்கு செல்லாமல் தொழினுட்பத்தை பயன்படுத்தி அவர் வெள்ள நீருக்குள் நிற்பது போன்று காட்சியை ஏற்படுத்தி, 'தான் தற்போது வெள்ளநீரில் நிற்பதாகவும் அதன் நிலைமையை நீங்களே கண்கூடாக பார்க்க கூடியதாக இருக்கும் எனவும் செய்தியை அறிக்கையிட்டுள்ளார்.

இதை பார்க்கும் போதும் உண்மையில் அவர் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என்பது தெளிவாக உள்ளது. எனினும் குறித்த ஊடகத்தின் செயற்பாடு ஏனைய ஊடகங்களின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த தொழினுட்பம் ஏனைய விடயங்களுக்கு பயன்படுத்தலாம். எனினும் இவ்வாறான சோகச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவது முற்றிலும் தவறு என்பதே அனைவரினதும் கருத்தாகும்.

ரவுடிகளின் அராஜகம்

சுமார் 40 இலட்சம் பேர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களிலும், சாலைகளிலும் தங்கியுள்ளனர். இம் மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவி குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நல் உள்ளம் படைத்தவர்கள் வழங்கும் நிவாரண உதவிகளை சில ரவுடிகள் தடுத்து நிறுத்தும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு அரசாங்கத்துக்கு நீதிமன்றம் மணு அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் வாதிகளின் சுயலாபம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதில் அரசியல் வாதிகள் முனம்முரமாக செயற்படுவதாக தெரியவில்லை. இந்த சோக சம்பவத்தை வைத்து கொண்டு தமது அரசியல் இலாபத்தை தேட முயற்சி செய்கின்றனர்.