(எம்.மனோசித்ரா)

அனைத்துலகையும் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள இலங்கை ஏனைய தொற்றும் அல்லது தொற்றா நோய்க் கட்டுப்படுத்தலில் தளர்வடைந்துள்ளதா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. 

இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரையில் நாடளாவிய ரீதியில் 6096 பேர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடளாவிய ரீதியிலுள்ள 6,096 நோயாளர்களில் 1,341 பேர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கேகாலை, அநுராதபுரம், பொலன்னறுவை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான எலிகாய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர கூறுகிறார்.

எலிக்காய்ச்சலானது  எலிகளால் அல்லது வேறு சில விலங்குகளின் (மாடுகள், எருமைகள்) சிறுநீரால்  பரவும் நோயாகும். 

இந்த நோயானது மனிதரில் இருந்து மனிதருக்குத் தொற்றுவதில்லை. பக்ரீரியா எனும் நுண்ணுயிர் வகையைச் சேர்ந்த ஒரு கிருமியால் எலிக்காய்ச்சல் உருவாகிறது. 

இக்கிருமி தொற்றிய எலிகளின் சிறுநீர் ஊடாகவே அந்த பக்ரீரியா வெளிச் சூழலுக்கு வந்து சேர்கிறது. இவ்வாறு வெளியேறிய பக்ரீரியாவானது வயல்களில் காணப்படும் சிறு கிடங்குகளில் நிற்கும் நீரிலும், வயல்களில் தேங்கியுள்ள நீர்ப்பரப்புகளிலும் தங்கிவிடுகிறது.

ஏற்கனவே தோலில் இருக்கும் காயங்கள் மற்றும் வயலில் வேலை செய்யும்போது தோலில் ஏற்படக்கூடிய சிறு சிராய்ப்புக் காயங்கள், புண்கள், தோல் உராய்வுகள் என்பன வழியாக மனித உடலுக்குள் இந்த பக்ரீரியா நுழைகிறது. 

வயல்களுக்கு அண்மையில் நீர்தேங்கியுள்ள குளம் குட்டைகளில் குளிக்கும்போது நீர்நிலைகளில் காணப்படும் பக்ரீரியாவானது கண்களில் உள்ள மென்சவ்வுகள் ஊடாக மனித உடலுக்குள் நுழைகிறது. பக்ரீரியா தேங்கியுள்ள நீரை மனிதர்கள் அருந்தும் போதும் அது மனித உடலுக்குள் செல்கிறது. 

வயல்களில் இறங்கி வேலைசெய்யும் விவசாயிகளுக்கு இந்த நோய் தொற்றும் அபாயம் அதிகம் உள்ளது. விவசாயிகளுக்கு மட்டும் அல்லாது வேறுதேவைகளுக்காக வயல்களில் இறங்கும் எவருக்கும் இந்த நோய் தொற்றும் அபாயம் உள்ளது.

காய்ச்சல், உடம்பு உளைச்சல் அல்லது உடல் நோதல், தலைவலி, உடல் களைப்பு, கண் சிவத்தல், வாந்தி, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல் , சிறுநீர் வெளியேறுவது குறைதல் என்பன இந்நோய்க்கான அறிகுறிகளாகும். எனினும் சில நோயாளிகளுக்கு இவற்றில் எந்தவொரு அறிகுறியும் தென்படாது. 

எலிக்காய்யச்சலுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டாலும் எந்த ஒரு சிகிச்சையினையும் பெறாமல் இருந்தால், சிறுநீரகங்கள், இதயம், மூளை, ஈரல் என்பவை பாதிப்படையும். நோய் மேலும் தீவிரமடையும்போது மரணம் ஏற்படும்.

எலிக்காய்ச்சலானது பக்ரீரியாவால் ஏற்படுவதால் அதனைக் குணப்படுத்துவதற்கு நுண்ணுயிர் கொல்லி (அன்ரிபயற்றிக்) சிகிச்சை நடைமுறையில் உள்ளது.  உரியகாலத்தில் தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோயாளிகள் இந்த நோயிலிருந்து முற்றாகக் குணமடைய முடியும். 

வயலிலிருந்து நீரை வடிந்தோடவிடுவதால் எலிக்காய்ச்சல் பரவுதலைத் தடுக்கலாம். அத்துடன் எலிகளைக் கட்டுப்படுத்துதல் , வயல்களைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சுத்தமாகப் பேணுதல், வயல்களைச் சூழ குப்பைகளைப் போடுவது எலிகள் பெருகுவதற்கு இடமளிக்கும் என்பதால் அதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.