அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழில் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 2010 - 2014 ஆம் ஆண்டுக்கிடையிலான காலப் பகுதியில் 153 ச.தொ.ச. தொழிலாளர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாகவும், இதன் மூலம் அரசுக்கு 40 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாகவும் கூறியே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

UPDATE

(எம்.மனோசித்ரா)

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு முறையானது சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளித்துள்ள  கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்துள்ளது.

2010 - 2014 வரை வர்த்தக அமைச்சராக செயற்பட்ட போது ச.தொ.ச நிறுவனத்தின் 153  ஊழியர்களை அவருடைய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதோடு , அதனால் அரசாங்கத்திற்கு 4 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது  இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட முறைமையானது சட்டத்துக்கு முரணானது எனத் தெரிவித்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அடிப்படை எதிர்ப்பை வெளியிட்டிருந்த போதிலும் அதனை நிராகரித்து அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்தது.

அந்த தீர்மானத்துக்கு எதிராக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எதிர்மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.