கதறும் தாய்மார்

By Gayathri

02 Oct, 2020 | 11:51 AM
image

இலங்கையில் நேற்று சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. சிறுவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும் அவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் இந்த சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சிறுவர் தினத்தை துக்க தினமாக கொண்டாடி அனுஷ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்து இராணுவத்திடம் சரணடைந்த போது ஒப்படைக்கப்பட்ட தமது சிறுவர்களுக்கு என்னவானது?

அரசாங்கம் இதுவரை அது தொடர்பில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை. அவர்கள் எங்கே? அவர்களை எம்மிடம் ஒப்படையுங்கள் என்று கோரியே முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கட்டடித்துக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டத்தின் போது அங்கு பிரசன்னமாகி இருந்த பெரும் அளவு  புலனாய்வாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டோரை புகைப்படம் எடுத்தும் காணொளி எடுத்தும் அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகளின் சங்கத்தின் தலைவியின் வீட்டுக்குச் சென்ற இரு புலனாய்வாளர்கள் மிரட்டும் தொனியில் அவரிடம் விபரங்களை கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி கூறுகையில், பயங்கரமானதோர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம். எமது உயிருக்கு கூட உத்தரவாதம் கிடையாது.  எம்மையும் கடத்துவார்களோ என்ற அச்சமே மேலோங்கி உள்ளது, என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இத்தகைய அச்சுறுத்தல்களை எம்மீது பிரயோகிப்பதை உடன் நிறுத்த வேண்டும். நாம் எமது பிள்ளைகளை இழந்தே வாடுகின்றோம்.

எனவே அவர்களை எமக்கு மீள கையளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

  இதனிடையே  இலங்கையில் மனித உரிமைகள் நிலை குறித்து  ஐ.நா செயலாளர் நாயகமும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மனித உரிமை பேரவையின் 43 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து  பயணித்தவர்களும் கலந்து கொண்டு விட்டு இலங்கை திரும்பியவர்களும் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.

இச்செயல் கவலையளிக்கும் விடயமாகும் ஐநா செயலாளர் நாயகம் அண்டனியோ குட்டரேஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடருக்கு அறிக்கை ஒன்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எமது கை வந்து சேரும் வரை சிறுவர்தினம் எமக்கு கரிநாளே என்று அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி குறிப்பிட்டுள்ளார்.

10 வருடங்களுக்கு முன் யுத்தத்தின் போது சரணடைந்த எங்கள் குழந்தைகள் எங்கே? சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய இலங்கை, அவர்களை காணாமல் ஆக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நீதிக்கோரி ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு மகஜர் ஒன்று அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் பொறுத்தமட்டில் யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் அவர்களின் உற்றார் உறவினர்கள், தாய்மார்கள் சதா கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

அவர்களின் போராட்டமும் கதறலும் முடிவின்றி தொடர்ந்த போதிலும் அது தொடர்பில் உறுதியான பதில் எதுவும் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.

தமது உறவுகளுக்கு என்னவானது என்று அறியாத வயதடைந்த நிலையிலும் கதறும் தாய்மாருக்கு ஆறுதல் கூறவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அரசை சார்ந்ததாகும்.

அதுமாத்திரமன்றி பல பெற்றோர் ஏக்கத்துடனேயே மரணித்து விட்டனர்.

அரசு இந்த பரிதாப நிலைக்கு முடிவு கட்டுவதுடன் புலனாய்வாளர்களின் தொந்தரவுகளையும் இல்லாமல் செய்ய உரிய நடிவடிக்கை எடுப்பது அவசியம். அதுவே மனிதாபிமான  செயற்பாடாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right