பொல்லார்ட் மற்றும் பாண்டியாவின் அதிரடி ஆட்டம் காரணமாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 191 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 13 ஆவது போட்டி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கிடையில் அபுதாபியில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய முதலில் துடுப்பெடுத்தாட மும்பை இந்தியன்ஸ் அணி ஆடுகளம் நுழைந்தது.

ஆடுகளம் நுழைந்த முதல் ஓவரிலேயே மும்பை அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது.

அதன்படி ஆரம்ப துடுப்பட்ட வீரராக ரோகித் சர்மா மற்றும் டிகொக் துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க, பஞ்சாப் அணி சார்பில் முதல் ஒவருக்காக ஷெல்டன் கொட்ரல் பந்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டார்.

அந்த ஓவரை எதிர்கொண்ட டிகொக், ஐந்தாவது பந்து வீச்சில் எதுவித ஓட்டங்களுமின்றி போல்ட் முறையில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். தொட்ந்து வந்த சூரியகுமார் யாதவும் நீண்ட நேரம் ஆடுகளத்தில் நிற்காமல் 10 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். 

இதனால் மும்பை அணி 3.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டினை இழந்து 21 ஓட்டங்களை மாத்திரம் பெற்று திக்குமுக்காடத் தொடங்கியது.

எனினும் 3 ஆவது விக்கெட்டுக்காக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுக்க பெரும் சிரமப்பட்டனர்.

இவர்களின் சிரமத்தின் பலனமாக மும்பை அணி 10 ஓவர்கள் நிறைவில் மேலும் விக்கெட்டுக்களை பறிகொடுக்காது 51 ஓட்டங்களை பெற்றது.

அதன் பின்னர் இஷான் கிஷான் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, களமிறங்கிய பொல்லார்ட்டுடன் கைகோர்த்த ரோகித் சர்மா 16 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் அரைசதம் விளாசினார்.

16 ஆவது ஓவரின் ஐந்து பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா அந்த ஓவரில் மாத்திரம் 21 ஓட்டங்களை விளாசித் தள்ளினார்.‍

எனினும் அவர் 17 ஆவது ஓவரின் முதல் பந்தில் பஞ்சாப் அணியின் அபார களத்தடுப்பு காரணமாக 45 பந்துகளில் 70 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து வெளியேறினார் (124-4).

ரோகித்தின் வெளியேற்றத்தையடுத்து களமிறங்கிய பாண்டியா பொல்லார்ட்டுடன் இணைந்து பட்டையை கிளப்ப ஆரம்பித்தார். 

இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 191 ஓட்டங்கள‍ை குவித்தது. இறுதி ஓவரை எதிர்கொண்ட பொல்லார்ட் மொத்தமாக 3 சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.

ஆடுகளத்தில் பொல்லார்ட் 20 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களுடனும், பாண்டியா 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

Photo Credit : ‍ ‍IPL