20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர அரசாங்கத்துக்கு மக்களின் ஆணை இருக்கிறதா?

Published By: Sajishnavan

01 Oct, 2020 | 07:57 PM
image

அசங்க வெலிக்கல


பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களுக்கு முரணானது எனக்கூறி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், கருத்தூன்றி பரிசீலிக்க வேண்டிய தேவை கொண்ட முக்கியமான இரு கேள்விகள் எழுகின்றன. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இலங்கையின் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் தன்மையை எவ்வாறு மாற்றப்போகிறது என்பது முதலாவது கேள்வி. இந்த மாற்றங்களை செய்வதற்கு அரசாங்கத்துக்கு மக்களின் ஆணை ஒன்று இருக்கிறதா? சட்டமூலத்தை பற்றி நான் வேறொரு கட்டுரையில் செய்த பூர்வாங்க மதிப்பீட்டின் அடிப்படையில் இது பற்றிய விளக்கங்களை இங்கு தருகிறேன்.


 திருத்தம் எவ்வாறு அரசியலமைப்பு ஜனநாயகத்தை மாற்றும்?


சட்டமூலத்தில் பிரேரிக்கப்பட்டிருக்கும் மாற்றங்கள் இலங்கையின் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் பண்பையும் தரத்தையும் மிகவும் பாதகமான முறையில், மிகவும் நாசகாரத்தனமான முறையில் என்றும் கூறலாம், மாற்றும். இந்தக் கருத்தை நிலைநிறுத்தும் முகமாக முக்கியமான ஒரு கோட்பாட்டு அம்சத்துடன் விளக்கத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. உடன்பாடு அல்லது இணக்கம் (Consent) மற்றும் வரையறைகள் அல்லது மட்டுப்பாடுகள் (Constraints) என்ற போட்டியிடுகின்ற இரு மத்திய முக்கிய சிந்தனைகளை சம்பந்தப்படுத்துகின்ற அரசாங்கத்தின் வகையே அரசியலமைப்பு ஜனநாயகமாகும். உடன்பாடு அல்லது இணக்கம் என்பது மக்களின் இறையாண்மை பற்றிய சிந்தனையை குறிக்கிறது. அதேவேளை, மட்டுப்பாடுகள் அல்லது வரையறைகள் எனப்படுபவை பொதுவில் சட்டத்தினால் மட்டுப்படுத்தப்படுகின்ற அரசாங்கம் பற்றிய சிந்தனையை குறிக்கிறது.


மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒழுங்கான முறையில் திரும்பத் திரும்ப தெரிவு செய்யப்படுகின்ற அரசாங்கங்கள் அவை அமைக்கப்படுவதற்கான ஆதாரங்களாக அமையும் நிரந்தரமான அரசியலமைப்பு ஏற்பாடுகளின் ஊடாக மக்களில் பெரும்பான்மையானவர்களினால் சுதந்திரமாக வெளிப்படுத்தப்படுகின்ற இணக்கத்தின் மீது அமைக்கப்பட வேண்டும் என்று மக்களின் இறையாண்மை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அரசுகள் வலியுறுத்துகின்றன. ஜனநாயகம் ஒன்று அரசியலமைப்பு  ஜனநாயகமாக கருதப்பட வேண்டுமானால், இந்த பெரும்பான்மை ஆட்சிக் கோட்பாடு (Principal Of Majoritarian Rule) அரசியலமைப்பினால் விதிக்கப்படுகின்ற வரையறைகளினாலும் சட்டத்தின் ஆட்சியினாலும் சமநிலைப்படுத்தப்பட வேண்டும். அந்த இரு அம்சங்களும் இருந்தால் மாத்திரமே ஒரு நாட்டை நாம் அரசியலமைப்பு ஜனநாயகம் என்று அழைக்க முடியும்.


நவீன அரசியலமைப்பு ஜனநாயகங்களில் எழுதப்பட்ட அரசியலமைப்புகளில் இந்த இரு அடிப்படை கோட்பாடுகளும் பல்வேறு பொது வழிமுறைகளினூடாக செயற்படுத்திக் காட்டப்படுகிறது. ஒன்று, அரசின் பிரதானமான மூன்று கிளைகளுக்கும் இடையிலான அதிகார வேறாக்கல். இன்னொன்று தற்காலிகமாக பெரும்பான்மையானவர்களின் விருப்பத்துக்கு இணங்கி சாதாரண சட்டங்களினால் மேலுரிமைப்படுத்த முடியாத பிரதான அடிப்படை உரிமைகளின் பிரகடனமும் பாதுகாப்புமாகும். மூன்றாவது அம்சம், இலங்கையின் அரசியல் விவாதங்களில் மிகவும் அரிதாக விளங்கிக் கொள்ள காரணியாக இருப்பது. அதாவது, அரசாங்க முறைகளில் நிறைவேற்று அதிகார பீடங்களை வடிவமைப்பதற்கான கீழ்கட்டுமான ஆதாரமாக அமைந்த இணக்கமும் வரையறைகளுமாகும். இவை பாராளுமன்ற அல்லது ஜனாதிபதி ஆட்சிமுறையுள்ள ஜனநாயகங்களில் வேறுபட்டதாக ஆனால், மனதில் ஒரே குறிக்கோளை கொண்டதாக அமைந்திருக்கிறது. இவை நிறைவேற்று அதிகார பீடம் பாராளுமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் பொறுப்புக்கூறுவதற்கான ஏற்பாடாக அமைந்திருக்கும் முத்தரப்பு அதிகார வேறாக்கலுக்கு மேலாகவும் அப்பாலும் நிறைவேற்று அதிகாரத்தின் மீது ஒரு உள்ளக தடுப்புகளை நிறுவுகிறது.


உதாரணமாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரங்களை பிரதமருடனும் அமைச்சர்களுடனும் சுயாதீனமானதும் துறைசார் பொதுச்சேவையுடனும் அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுடனும் சேர்ந்தே தனது நிறைவேற்று அதிகாரங்களை செயற்படுத்த வேண்டும் என்பதே சாத்தியமானளவுக்கு விளங்கிக்கொள்ளப்பட்ட எமது ஆட்சிமுறையின் தர்க்கம் ஆகும். நிறைவேற்று அதிகார பீடத்துக்கு இருக்கின்ற இந்த உள்ளக வரையறைகள் அரசியலமைப்பு ஜனநாயகம் ஒன்று நிலைபேறானதாக இருக்க வேண்டுமானால், எந்த ஜனநாயக ஆட்சிமுறையிலும் இருக்க வேண்டியவையாகும். இவை இல்லாத பட்சத்தில் அல்லது 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தினால் பிரேரிக்கப்பட்டவாறு இல்லாமல் செய்யப்படுமானால் குறைவான ஜனநாயக தன்மைகொண்ட முறைமையாகவே இருக்கும்.


20ஆவது திருத்தம் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் முதன்மையான இரு கோட்பாடுகள் மீதும் தாக்குதலை தொடுக்கிறது என்பதே அது பற்றிய மையப் பிரச்சினையாகும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள் மீது தற்போது இருக்கின்ற அரசியலமைப்பு ஏற்பாடுகளின் வழியிலான சகல வரையறைகளையும் நீக்குவதன் மூலமாக 20ஆவது திருத்த மட்டுப்பாடுகள் என்ற சிந்தனையை தாக்குகிறது. 20ஆவது திருத்தத்தினால் அறிமுகப்படுத்தப்படக்கூடிய தனி ஒருவரின் மட்டுப்பாடுகள் ஏதுமற்ற ஆட்சிமுறை பொதுமக்களின் இறையாண்மையின் வெளிப்பாடல்ல. ஆனால், அதை ஒரு நபரின் விருப்பு வெறுப்புகளுக்கு மக்களின் இறையாண்மை விட்டுக்கொடுக்கப்படுகிறது அல்லது அந்நியப்படுத்தப்படுகிறது என்றே கருதவேண்டும். அரசியலமைப்பு ஜனநாயகம் வேண்டி நிற்கின்ற அந்தக் கோட்பாட்டு அடிப்படையை வலியுறுத்திக் கூறுவதன் கூலமே அரசியலமைப்புக்கான 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தினால் ஏற்படுகின்ற பாதிப்புகளை அல்லது தாக்கங்களை எம்மால் மதிப்பிடவும் விளங்கிக்கொள்ளவும் முடியும். இந்த சட்டமூலம் அரசியலமைப்பு ஜனநாயகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் மட்டுப்பாடுகளற்றதும் கொடுங்கோன்மையானதுமான அரசாங்கம் ஒன்றை தோற்றுவிக்கிறது என்பதையும் இந்த சட்டமூலம் பிரேரிக்கின்ற ஆட்சிமுறைமையில் நிறுவனங்களுக்கிடையிலான உறவுகள் பற்றிய நான்கு கூறுகளின் மூலமாகவும் எடுத்துக் காட்ட முடியும்.


நிறைவேற்று அதிகார பீடத்துக்குள்


அரசியல் நிறைவேற்று அதிகார பீடம் இனிமேலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் இடையே பகிரப்பட்ட அதிகாரத்தை கொண்ட ஒரு நிறுவனம் அல்ல. பிரதமரும் அமைச்சரவையும் வெறுமனே ஜனாதிபதியின் சேவகர்களாக மாறுவார்கள். ஜனாதிபதி அமைச்சு பொறுப்புகள் எதனையும் வைத்திருக்க முடியாது என்ற மட்டுப்பாடு நீக்கப்படும். அமைச்சரவையினதும் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களினதும் எண்ணிக்கை மீதான கட்டுப்பாடும் நீக்கப்படும். இந்த மாற்றங்கள் எல்லாவற்றினதும் கூட்டான தாக்கம் ஜனாதிபதிக்கு அமைச்சரவையும் அதன் உறுப்பினர்களும் அடிமைபடும் ஒரு நிலைமையை வளர்க்கும் என்பதுடன் முழு அரசியல் நிறைவேற்று அதிகார பீடத்தின் மேலாக ஒரு நபரின் விருப்புகளே திணிக்கப்படும். ஜனாதிபதி செயலணி (Presidential Task Forces) போன்ற சட்டரீதியாக சந்தேகத்துக்குரிய இடைக்கால ஏற்பாட்டு அமைப்புகள் ஊடாக ஆட்சி செய்வதற்கான தனது விருப்பத்தை தற்போதைய ஜனாதிபதி ஏற்கனவே வெளிக்காட்டியிருக்கிறார். 


இந்த இடைக்கால ஏற்பாட்டு அமைப்புகள் எந்தவிதமான வெளிப்படைத் தன்மையும் கலந்தாலோசனையும் இல்லாமல் நியமிக்கப்படுகின்றன. பிரதமர் பதவியும் அமைச்சரவையும்  பலவீனப்படுத்தப்படுவது இந்த பாணியிலான எதேச்சாதிகார ஆட்சி நடைமுறையை வலுப்படுத்தும். முக்கியமான அரசாங்க அதிகாரிகளும் சுயாதீன ஆணைக்குழுக்களும் பல கட்சி பிரதிநிதித்துவத்தைக் கொண்ட அரசியலமைப்பு பேரவையினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற சுயாதீனமான செயன்முறையினால் நியமிக்கப்படுகின்ற பாதுகாப்பு இல்லாமல் போகும். அரசியலமைப்பு பேரவைக்கு (Constitutional Council) பதிலாக மீண்டும் கொண்டுவரப்படுகின்ற பாராளுமன்ற பேரவை (Parliamentary Council) ஜனாதிபதியை கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் அந்தப் பேரவை உயர் பதவி நியமனங்கள் தொடர்பில் கருத்துகளோ அவதானங்களோ ஜனாதிபதியை கட்டுப்படுத்தாது. அரசாங்க சேவையிலுள்ள அதிகாரிகளும் நீதி நிர்வாகத்திலுள்ள அதிகாரிகளும் தேர்தல், மனிதவுரிமைகள் மற்றும் அது சார்ந்த நிதிப் பொறுப்புடைமைக்குரிய நிறுவனங்களிலும் உள்ள அதிகாரிகள் பொதுநலனிலும் பார்க்க ஜனாதிபதியின் ஆணைகளின் பிரகாரம் சேவை செய்வதற்கான சகலவிதமான ஊக்குவிப்புகளும் இருக்கும்.


நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில்


பாராளுமன்றம் அதன் ஐந்து வருட பதவி காலத்தில் நான்கரை வருடங்கள்  பூர்த்தியாவதற்கு முன்னதாக ஜனாதிபதியினால் ஒருதலைப்பட்சமாக கலைக்கப்பட முடியாது என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தின் முதலாவது வருடம் பூர்த்தியானதுடன் முற்றிலும் தனது சொந்த தற்துணிவின் அடிப்படையில் பாராளுமன்றத்தை கலைக்கக்கூடியதாக இருக்கும். ஜனாதிபதிக்கு இத்தகையதொரு மட்டுப்பாடற்ற அதிகாரங்களை கொடுப்பதனூடாக, ஜனாதிபதியின் விருப்பு வெறுப்புகளை முறியடிக்க முயற்சிக்கக்கூடிய எந்தவொரு பாராளுமன்றத்தையும் கலைப்பு அச்சுறுத்தலினால் ஜனாதிபதிக்கு அடிப்பணிய வைக்க முடியும். தேர்தல்கள் மிகவும் செலவு பிடிக்கின்ற விவகாரமாகும். அதனால் உரிய காலத்துக்கு முன்கூட்டியே தேர்தல்கள்  நடைபெறுவதற்கான சாத்தியத்தை பெருமளவான எம்.பி.க்கள் விரும்ப மாட்டார்கள். 


அதனால் திடீர் தேர்தல்களில் தங்களுக்கு பெரும் செலவுகள் ஏற்படாதிருக்;க ஜனாதிபதியின் விருப்புக்கிணங்கி, எம்.பி.க்கள் செயற்படுவார்கள். இந்த வகையாக இலங்கை அரசின் முக்கிய நிறுவனங்களில் ஜனநாயக ரீதியின் மிகவும் பிரதிநிதித்துவம் கொண்டதாக விளங்குகின்ற பாராளுமன்றம் ஒரு நபரின் விருப்பு வெறுப்புக்கு அடிப்பணிய செய்யப்படுகின்றது. நிறைவேற்று அதிகார பீடத்தை பொறுப்புக்கூற வைப்பதில் பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு ரீதியான பாத்திரம் புதிய கட்டமைப்பின் கீழ் மலினப்படுத்தப்படக்கூடிய இரண்டாவது வழிமுறை ஒன்றும் இருக்கிறது. அமைச்சர்களின் எண்ணிக்கை மீது இருந்துவரும் உச்சவரம்பு அகற்றப்படுவதால் பெருமளவு எண்ணிக்கையான எம்.பி.க்களை அமைச்சு பதவிகளுக்கு நியமிக்க ஜனாதிபதி அனுமதிக்கப்படுகின்றார். இந்தவகையில் தனது கூட்டணிக்குள் இருக்கின்ற எம்.பி.க்களின் விசுவாசத்தை ஜனாதிபதியினால் நிச்சயமாக பெறக்கூடியதாக இருக்கும். அதுமாத்திரமல்ல, எதிரணியின் எம்.பி.க்களின் ஆதரவையும் அவரால் பெறக்கூடியதாக இருக்கும். அமைச்சர் பதவி நியமனங்கள் வடிவில் அனுசரணை வழங்குவதும் ஆதரவளிப்பதுமான (Patronage Distribution) பாரதூரமான பிரச்சினையாக இருக்கின்ற ஒரு அரசியல் கலாசாரத்தில் இந்த மாற்றம் எம்.பி.க்கள் அவர்களது அரசியலமைப்பு ரீதியான பாத்திரத்தை நிறைவு செய்வதற்கு இருக்கக்கூடிய எந்தவொரு ஊக்குவிப்பு மீண்டும் அகற்றப்படும். பதிலாக எதிர்ப்பு வெளிக்காட்டப்படுதலை இல்லாமல் செய்வதற்கும் அனுசரணையும் ஆதரவும் வழங்குகின்ற ஊழல் மிகுந்த சந்தை ஒன்று உருவாக்கப்படுகின்றது.


நிறைவேற்று அதிகாரப் பீடத்துக்கும் நீதிமன்றங்களுக்கும் இடையில் 


ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்களை தாக்கல் செய்து உச்சநீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தை நாடுவதற்கு வழிசெய்கின்ற மட்டுப்படுத்தப்பட்ட ஆனால், அதேவேளை முக்கியமான கோட்பாட்டையும் 20ஆவது திருத்தம் நீக்குகிறது. இவ்வாறாக உச்சநீதிமன்றத்தை நாடுவது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட ஆனால் அதேவேளை ஜனாதிபதியின் சட்டரீதியான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான ஒரு பயனுறுதியுடைய பொறிமுறையாக இது இருக்கிறது. இந்த பொறிமுறையை நீக்குவது 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு பின்னரான ஜனாதிபதி சட்டத்துக்கு அப்பாற்பட்டவராக இருப்பார் என்பதை தெளிவாக குறித்து நிற்கிறது.


நாட்டின் மிகவும் சிரேஷ்ட நீதிபதிகளை (உச்ச நீதிமன்றத்தினதும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் நீதிபதிகள்) பாராளுமன்ற பேரவையின் அவதானிப்புக்கு மாத்திரம் ஆட்பட்டதாக ஜனாதிபதி நியமிப்பார். இந்த அவதானிப்புக்கு ஜனாதிபதி கட்டுப்பட வேண்டியவராக இல்லை. உண்மையில் இது ஜனாதிபதியின் அதிகாரங்கள் மீது அர்த்தபுஷ்டியான மட்டுப்பாட்டை விதிப்பதாக இல்லை. இதன் மூலமாக நடைமுறையில் ஜனாதிபதியின் அதிகாரத்தின் மீதான எந்தவொரு அர்த்தமுடைய மட்டுப்பாட்டையும் அது விதிக்கவில்லை. இது மேல்நிலை நீதித்துறை (Senior Judiciary) அரசியல் மயப்படுத்தப்படுகின்ற சூழ்நிலையை தோற்றுவிக்கும்.


நீதிச்சேவைகள் ஆணைக்குழு கீழ்நிலை நீதித்துறையை (Minor Judiciary) மேற்பார்வை செய்கிறது. அது தலைவராக பிரதம நீதியரசரையும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற உச்சநீதிமன்றத்தின் வேறு இரு நீதிபதிகளை உறுப்பினர்களாகவும் கொண்டதாகும். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் ஏனைய இரு உறுப்பினர்களும் மிகவும் மூத்த இரு நீதிபதிகளாக அல்லது ஒரு மூத்த நீதிபதியும் அவருக்கு அடுத்ததாக அனுபவத்தைக் கொண்ட மூத்த நீதிபதியாகவும் இருக்க வேண்டும் என்ற தற்போதைய நிபந்தனையை இது இல்லாமல் செய்கிறது. இது ஜனாதிபதி தனது விருப்பத்துக்குரியவருக்கு சலுகை காட்டும் போக்கை மீண்டும் நேரடியாக கொண்டுவரும். இவை எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும்போது  இந்த இரு மாற்றங்களும் சுயாதீனமான நீதித்துறை கோட்பாட்டை கடுமையாக மலினப்படுத்தும். இந்த கோட்பாடு அரசியலமைப்பு ஜனநாயகம் ஒன்றின் மிகவும் அடிப்படையான கோட்பாடாகும்.


அரசுக்கும் சமூகத்துக்கும் இடையில்


மேலே விபரிக்கப்பட்டவாறு அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் நிறைவேற்று அதிகார பீடத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையிலான, நிறைவேற்று அதிகார பீடத்துக்கும் நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வை விரிவான முறையில் பலவீனப்படுத்துவதன் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியிடம் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத அதிகாரத்தை முறைப்படியாக குவிக்கும் அரசாங்க முறையொன்றை ஏற்படுத்தும். அத்துடன் நிறைவேற்று அதிகார பீடத்துக்குள் பொறுப்புக்கூறலையும் ஜனாதிபதி மீதான தடுப்புகள் மற்றும் சமப்படுத்தல்களையும் அது பலவீனப்படுத்தும். முறைப்படியாக ஏற்படுத்தப்படுகின்ற அத்தகைய முறைமை முறைசாரா நடைமுறைகள் பல்கிப் பெருகுவதற்கு வழிவகுத்து நிலைமையை மேலும் மோசமாக்கும். பொறுப்புக்கூறல் தொடர்பிலான மட்டுப்பாடுகளின் அல்லது வரையறைகளின் பெரும்பாலான அடிப்படை வடிவங்களை நீக்குவதன் மூலமாகவும் விலக்கீட்டு உரிமையை (Impunity) உற்சாகப்படுத்துவதன் மூலமாகவும் இந்த அரசாங்க முறைமை எதேச்சாதிகாரத்தையும் ஊழலையும் சட்டத்துக்கு கீழ்படியாத குழப்பகரமான நிலைவரத்தையும் இறுதியில் வன்முறை மூலம் ஒடுக்குமுறை மேற்கொள்கின்ற அரசொன்றையும் தோற்றுவிக்கும்.


இந்த விளைவுகளை சமூகம் பொதுவாக உணரத்தொடங்கும்போது  அரசியலமைப்பு ரீதியான ஜனநாயகத்தின் நிறுவன கட்டமைப்பு முழுவதும் வலுக்கெடச் செய்யப்பட்டிருக்கும். அதனால் அந்தக் கட்டமைப்புகள் சமூகத்தில் ஏற்படக்கூடிய அதிருப்திகளை கையாளுகின்ற அவற்றின் பணிப்பொறுப்பை செயற்படுத்த இயலாமல் போயிருக்கும். சமூக அதிருப்தியை கையாளுகின்ற இந்த நோக்கத்துக்காக எந்தவொரு நிறுவன ரீதியான வழிமுறை எதுவும் இல்லாதபோது அந்த அதிருப்தி அரசியல் நெருக்கடியாக மாறும். தனது அதிகாரம் அத்தகைய சவால்களுக்கு முகம்கொடுக்க நேரும்போது எதேச்சாதிகார ஜனாதிபதி அளவுமீறி அரச வன்முறையை பயன்படுத்துவார். இத்தகைய சவால்களுக்கு முகம்கொடுக்கின்றபோது அவற்றை கையாளுவதற்கு எதேச்சாதிகார அரசுக்கு தெரிந்த ஒரேயொரு வழிமுறையாகும். இதுவே இலங்கையினதும் உலகினதும் வரலாற்று அனுபவமாக இருக்கிறது.

சட்டரீதியான வன்முறையை பொறுத்தவரை அரசுக்கு இருக்கின்ற ஏகபோகத்தை நடைமுறையில் செயற்படுத்துவதற்காக அரசியலமைப்பு ஜனநாயகத்தில் ஒழுங்கமைப்பு நிறுவனங்கள் இல்லாதபோது பொது ஒழுங்கு கட்டுப்பாட்டை பேணுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட (அது சட்டரீதியானது) பயன்படுத்துவதற்கும் அரச பயங்கரவாதத்துக்கும் (அது சட்டரீதியற்றது) இடையே வேறுபடுத்தி பார்ப்பதற்கு எதுவும் இருக்காது. இது மேலும் மேலும் அரசியல் நெருக்கடியை தோற்றுவிக்கும்;  ஒழுங்கு கட்டுப்பாட்டை பேணுவதன் அடிப்படையில் அரசியல் ரீதியான கட்டமைப்பு ஒன்றை கையாள முடியாதவாறு குழப்பகரமானதாக மாற்றிவிடும்.
20ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் விதந்துரைக்கப்பட்டிருக்கின்ற எதேச்சாதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அரசாங்கத்துக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவுமுறை அரசியலமைப்பு ஜனநாயகத்தை மேலும் இன்னொரு மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் வலுக்கெடச் செய்யும். அதாவது இலங்கையின் அரசியல் கலாசாரத்திலே இருக்கின்ற பகிரங்கமாகக் கூறப்படாத நயநாகரீகம், கட்டுப்பாட்டு ஆற்றல், சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகியவற்றை நிர்மூலம் செய்யும்.


முழு அரசினதும் அதிகாரத்தை ஒரு நபரின் கையில் குவிப்பது அந்த நபரினதும் அவரது ஆதரவாளர்களினதும் மாத்திரமல்ல, முழு சமூகத்தினதும் தார்மீகப் பண்பு தாழ்நிலைக்கு செல்லும் சூழ்நிலையை உருவாக்கும். அரசியலமைப்பு ஜனநாயகத்துக்காக அரசிலிருந்து விடுபட்டு செயற்படுவதற்காக ஓரளவு  சுயாட்சியை அனுபவிக்க வேண்டியவையாக இருக்கும் சகல அரசசார்பற்ற நிறுவனங்களும் (அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள், தனியார்துறை மற்றும் மதகுருமார்) அதீதமாக அரசியல் மயப்படுத்தப்பட்டவையாக மாத்திரமல்ல, ஒரு நபரின் மகிழ்ச்சியை சுற்றி அரசியல் மயப்படுத்தப்பட்டவையாகவும் மாறும்.
இந்த நிலைவரம் பொதுமக்கள் மத்தியில் உருவாகக்கூடிய மரபு வழுவாத – அடிமைத்தனமான ஒத்துப்போகும் தன்மை வெறுமனே மனித கௌரவத்தின் இழப்பை மாத்திரமல்ல இந்த நிறுவனங்கள் எல்லாமே குறைந்த பட்சம் குறுகிய காலத்துக்கேனும் ஊழல்தனமாக பெறக்கூடிய பலன்களுக்காக தங்களது நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்கும் நிலையும் ஏற்படும். இந்த சமூக மாற்றத்தின் உட்கிடையான தாக்கம் அரசியலமைப்பு ஜனநாயகம் ஒன்றின் பிரஜைகளாக எவ்வாறு இருப்பது என்பதை கூட்டாக மறக்க செய்யும். இதன் விளைவாக ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான பணிகள் மேலும் சிக்கலானவையாக மாறும். 


முன்னர் நாம் இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சிகளை கொண்டிருந்தாலும் பிறகு அந்த ஆட்சியாளர்கள் தங்களது போக்கை தாங்களாகவே திருத்திக்கொண்ட அனுபவங்கள் இருக்கின்றன. அதற்கு காரணம் ஒப்பீட்டளவில் மேம்பாடான ஜனநாயகத்துக்கு மீண்டும் சுமுகமாக திரும்புவதற்கு உதவக்கூடிய அத்தியாவசியமான அரசியலமைப்பு ரீதியான நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இருந்தன. நிறுவன ரீதியான மீள் எழுச்சியையும் ஜனநாயக ரீதியில் தவறை உணர்ந்து திருந்துவதற்கு தேவையான சமூக மூலதனமும் அழித்தொழிக்கப்படக்கூடிய பாரதூரமான நிலைமையையும் 20ஆவது திருத்தம் கொண்டுவரும். அதுவே இந்த திருத்தத்தின் விளைவான பாரதூரமான ஆபத்தாகும். இந்த அரசியலமைப்பு வீரசாகசம் வெறுமனே அரசுக்கு  நெருக்கடியை கொண்டுவருவது மாத்திரமல்ல, அத்தகைய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து மீண்டும் ஜனநாயக வாழ்வுக்கு திரும்புவதற்கு விட்டு வைக்கப்பட்டிருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட கலாசார வளங்களையும் அபகரித்து விடும்.


சிலருக்கு இது ஒரு கேள்வியாகவே இல்லாமல் இருக்கலாம் அல்லது சுலபமாக பதில் கூறக்கூடிய கேள்வியாக இருக்கலாம். 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் 2020 பாராளுமன்றத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வாக்குகளை பொறுத்தவரையிலும் ஆசனங்களை பொறுத்தவரையிலும் அதிக பெரும்பான்மையுடன் தீர்க்கமான வெற்றிகளை பெற்றது. இந்த தேர்தல்களின் முடிவுகள் மீது அரசியலமைப்பு மாற்றத்தை விடவும் வேறு பிரச்சினைகளே செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன என்ற அதேவேளை, பொதுஜன பெரமுன ஆட்சியதிகாரத்துக்கு வருவதற்கு முன்னதாகவே அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தத்தை ஒழிக்க திட்டமிட்டிருந்தது என்பது வெளிப்படையாக தெரிந்தது. வெறுமனே நல்லாட்சி  அரசாங்கத்தை மாத்திரமல்ல, 19ஆவது திருத்தத்தின் பிரதான சாதனைகளையும் கூட மக்கள் நிராகரித்தார்கள் என்ற வாதத்துக்கு வலுச்சேர்த்த வேறு காரணங்களும் இருக்கின்றன. 2015ஜனவரியில் தெரிவு செய்யப்பட்ட முதல் நாளிலிருந்தே நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காக மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கான பணியை செய்வதில் உள்ள இயலாமையை வெளிக்காட்டியது. மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள், அரசியலமைப்புச் சதி நெருக்கடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், நல்லாட்சி தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் அந்த அரசாங்கத்துக்கு இருந்த தகைமை மீதான நம்பகத்தன்மையை சிதைத்தன.

மிகவும் நெருக்கடியான சூழ்நிலைகளின் கீழ் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் போதுமானவையாக இருக்கவில்லை. புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவதற்கு தவறியிருந்தாலும் கூட நல்லாட்சி அரசாங்கம் தன்னால் கொண்டுவரப்பட்ட சீர்த்திருத்தங்கள் கூட மக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு எதையும் செய்ய இயலாததாக இருந்தது. இவையெல்லாவற்றுக்கும் காரணம் 19ஆவது திருத்தத்தின் கீழான ஜனாதிபதி ஆட்சிமுறையே என்ற வாதத்துக்கு வலுச் சேர்த்தன. இதனால் 19ஆவது திருத்தத்தின் சிலபகுதிகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற வாதம் வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்கள் மத்தியில் காணப்பட்ட கருத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது.
இருந்தாலும் கூட நாம் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அரசியலமைப்பு ஜனநாயகத்தின் கோட்பாட்டு ரீதியான கட்டமைப்பின் அடிப்படையில் சிந்திப்போமானால், புதிய அரசாங்கம் அதற்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையை வியாக்கியானப்படுத்துகின்ற முறையை மதிப்பிடுவதற்கு அந்த கோட்பாட்டை பயன்படுத்துவோமாக இருந்தால் நாம் சற்று நிதானமாக நின்று சிந்திப்பதற்கு பல காரணங்கள் இருப்பதை உணர முடியும். இந்த கோட்பாட்டு கட்டமைப்பை நாம் ஏற்றுக்கொள்வோமானால் ஒரு பலம் பொருந்திய அரசாங்கம் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி மீதிருந்த சில வரையறைகளை நீக்குவதற்கு மக்கள் வாக்களித்தார்கள் என்றும் ஏற்றுக்கொள்வோமேயானால், அவர்கள் தங்களது இறையாண்மையை இழப்பதற்கே அந்த மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்று நடைமுறையில் கற்பனையே செய்து பார்த்திருக்க முடியாத நிலைவரத்தையும் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கான யோசனைகளை முன்வைக்கும்போது 20ஆவது திருத்த சட்டமூலத்தை வரைந்தவர்கள் தாங்கள் இப்பொழுது செய்ய முயற்சிக்கின்ற மாற்றங்கள்  எல்லாவற்றுக்கும் ஆணை ஒன்று உள்ளது என எவ்வாறு தீர்மானித்தார்கள்? ஜனாதிபதியின் இரு பதவிக்கால வரையறைகளை நீக்குவதற்கும் ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை ஆறு வருடங்களிலிருந்து ஐந்து வருடங்களாக குறைத்திருப்பதை மாற்றுவதற்கும் தகவலை பெறுவதற்கான உரிமையை இல்லாமல் செய்வதற்கும் தங்களுக்கு ஆணை ஒன்று இல்லை என்று எவ்வாறு தீர்மானித்தார்கள்? 19ஆவது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அதிகாரத்தை பகிர்வதற்கான கட்டமைப்பே ஒரு செயற்திறமையற்ற அரசாங்கத்துக்கு காரணமாகியது என்று வாக்காளர்கள் தீர்மானித்திருந்தாலும் கூட நீதித்துறையையும் பொலிஸையும் அரசியல் மயப்படுத்துவதற்கும் சுயாதீன ஆணைக்குழுக்களை மலினப்படுத்துவதற்கும் அமைச்சுகளின் எண்ணிக்கை மீதான உச்ச வரம்பை அகற்றுவதற்கும் பொது கணக்காய்வை பலவீனப்படுத்துவதற்கும் ஊழலுக்கும் கெடுதியான ஆட்சிக்குமான வாய்ப்பை அதிகரிக்கின்ற விடயங்களை செய்வதற்கும் அவர்கள் வாக்களித்திருப்பார்கள் என்று நினைத்து பார்க்க முடியுமா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிகண்ட இரண்டு தேசிய தேர்தல்களில் ஏதாவது ஒன்றுக்கு முன்னதாக 20ஆவது திருத்தம் பொது விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் மக்கள் தங்களது இறையாண்மையையும் அரசியலமைப்பையும் தனி நபரின் ஆட்சியிடம் விட்டுக்கொடுக்கக்கூடிய வகையில் அரசாங்கம் மீதான மட்டுப்பாடுகளில் பலவற்றை நீக்குவதற்கு தீர்மானித்திருப்பார்கள் என்பது சாத்தியமா? வாக்காளர்களில் சில பிரிவினருக்கு இது ஒரு பிரச்சினையாகவே இருந்திருக்காது என்பதிலும் சந்தேகமில்லை.
இலங்கையர்கள் தங்களது அரசியல் விருப்பத் தெரிவுகளை வியப்பு தருகிற வழிகளில் பதிவு செய்ய விரும்புகின்ற ஒரு உணர்ச்சிமிக்க மக்கள். இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் நேசிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவரை தோற்கடிப்பதற்கு 2015 ஜனவரியில் அவர்கள் வாக்களித்ததை போன்று 2019இலும் 2020இலும் நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப விரும்பினார்கள். 
ஆனால், இறுதி ஆய்வாக நோக்குகையில், 80வருடகால தேர்தல் ஜனநாயகத்துடன் பரிச்சயப்பட்டுவிட்ட மக்கள் 20ஆவது திருத்த சட்டமூலத்தில் பிரேரிக்கப்பட்ட வழிமுறைகளில் தங்களது அரசியலமைப்பு ஜனநாயகத்தை நிர்மூலம் செய்வதற்கு சம்மதிப்பார்கள் என்று நிச்சயமாக நினைத்து பார்க்க முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13