13 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 13 ஆவது ஆட்டம் ரோகித சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அபுதாபியில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள பஞ்சாப் அணி களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

அதன்படி மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு ஆடுகளம் நுழையவுள்ளது.

பஞ்சாப், மும்பை அணிகள் தலா ஒரு வெற்றி, 2 தோல்வி என்று இதுவரை 2 புள்ளி மட்டுமே பெற்றுள்ளன. 

பஞ்சாப் அணியில் தலைவர் ராகுலும், மயங்க் அகர்வாலும் வலுவான நிலையில் உள்ளனர். இருவரும் நடப்பு தொடரில் சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி 223 ஓட்டங்களை குவித்தும் கொட்ரோலின் ஒரே ஓவர் அவர்களின் வெற்றிக் கனவு கலைந்து போனது.

மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் பஞ்சாப் வீரர்கள் ஆயத்தமாகியுள்ளனர். 

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக சூப்பர் ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது. 

எனினும் கடைசி 5 ஓவர்களில் 89 ஓட்டங்களை குவித்து பெங்களூருவை கதிகலங்க வைத்தனர்.

இந் நிலையில் இப் போட்டியில் அதே அதிரடி ஜாலத்தை இந்த ஆட்டத்திலும் தொடருவார்களா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

‍இவ்விரு அணிகளும் இதுவரை 24 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 11 வெற்றிகளையும், மும்பை அணி 13 வெற்றிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.