உக்ரேனின் கிழக்குப் பிராந்தியமான லுஹான்ஸ்கில் பரவியுள்ள காட்டுத் தீ காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

9,300 ஹெக்டர் (36 சதுர மைல்) பரப்பளவில் ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக 22 குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளதுடன், 120 பேர் வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.

தீயிணை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளால் கட்டுப்படுத்தப்படும் அருகிலுள்ள பகுதியில் ஷெல் தாக்குதல்கள் இடம்பெறுவதன் மூலம் இந்த தீப் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று உக்ரேனிய உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு உக்ரேனிய ஜனாதிபதி அலுவலகம் சட்ட அமுலாக்கு அதிகாரிகளுக்க பணிப்புரை விடுத்துள்ளது.

கடந்த மாதம் உக்ரேனிய இராணுவம் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகள், அரசாங்கப் படைகளுடன் உடன்பட்ட போர்நிறுத்தத்தை மீறியதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உக்ரேனிய படையினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் 2014 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக 13,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

2015 இல் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உடன்பாடு போரை முடிவுக்கு கொண்டு வந்தது. எனினும் அவ்வப்போது குறித்த பகுதியில் மோதல்கள் இடம்பெற்றவாரே உள்ளது.