இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு நாக்கறுக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணை பார்க்க சென்றமைக்காக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் பிரியங்கா காந்தி வந்தோரா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14ம் திகதி புல்லறுத்துக்கொண்டிருந்த 19 வயதான பட்டியல் இனப்பெண் வமுறைக்கு உட்படுத்தப்பட்டதோடு அதைப்பற்றி பேசக்கூடாது என்பதற்காக நாக்கறுக்கப்பட்டார்.


படுகாயங்களுடன் கிடந்த அப்பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் தாக்கியதில், அப்பெண்ணுக்கு முதுகுஉட்பட பல இடங்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் வைத்தியசாலையில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து, டெல்லியிலும், உத்தர பிரதேசத்திலும் போராட்டங்கள் வெடித்தன. அரசியல்வாதிகள், திரையுலகினர், விளையாட்டுத் துறையினர் என பல்வேறு தரப்பினரும் நீதி கேட்டு குரல் கொடுத்தனர். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.


இந்நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்தை பார்க்க காங்கிரஸ் கட்சி சார்பில் சென்ற பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் வாகனங்கள் இடைமறிக்கப்பட்டன. இதை பொருட்படுத்தாது யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் தொண்டர்களுடன் நடந்தே சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


இந்நிலையில், தடையை மீறி ஹத்ராஸ் நோக்கி செல்ல முயன்ற ராகுல் காந்தியை போலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.