இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசம் தனது கவனத்தை செலுத்தி வருகின்றது.

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கப்படுவது புலனாவுப்பிரிவினர் வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டு தனிப்பட்ட விடயங்களைக் கூட கண்காணிக்க முயல்வது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவை மாத்திரமின்றி காணாமல்போனவர்களின் உறவுகளால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் தொடர்பில் தீவிரமாக கண்காணிக்கப்படுவது மற்றும் அச்சுறுத்தப்படுவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் தெரிவிக்ப்படுகின்றன.

மனித உரிமை பேரவையின் 13 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து பயணித்தவர்களும் கலந்துகொண்டுவிட்டு இலங்கை திரும்பியவர்களும் விசாரணைக்கு உட்டுபத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியா குட்ரஸ் அது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும், ஐ.நா மனித உரிமை பேரவையின் 45 ஆவது கூட்டத்தொடரருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே, ஐ.நா செயலாளர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையிலும், ஜெனிவாவிலும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் ஆகியோரும் கண்காணிக்கப்படுவதாக அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புகார் வழங்கிய குடும்பங்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்துக்கு கிடைத்து வருவதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் சிவில் அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டிய கடமைகளுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகவும் நாடு மெல்ல ஜனநாயக பண்புகளை இழந்து வருவது போன்ற தோற்றப்பாடே காணப்படுவதாகவும் உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், தொடரும் செயற்பாடுகளும் அதனை நியாயப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே, இலங்கையின் நற்பெயருக்கு எந்தவகையிலும் அபகீர்த்தி ஏற்படாதிருப்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களைச் சார்ந்ததாகும்.

ஏற்கனவே, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பிலும் யுத்த குற்றங்கள் தொடர்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை உலகில் இலங்கையின் நற்பெயருக்கு மாத்திரமன்றி கீர்த்திக்கும் சவாலாக மாறியுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போதும், யுத்த மீறல்களின் போதும் இலங்கை சர்வதுச ரீதியில் பாரிய பின்னடைவை எதிர்நோக்க நேர்ந்தது. கடந்தகால அனுபவங்களில் இருக்கும் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

வெறுமனே சர்வதேசத்தைப் பகைத்துக்கொண்டோ உதாசீனம் செய்யும் வகையிலோ நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.

சர்வதேச ரீதியில் இலங்கை முன்னேற வேண்டுமானால், முதலில் சர்வதேசத்தை அனுசரித்து அதற்கேற்ப நடந்து கொள்வதே விவேகமான செயலாக இருக்கும் என்பதை நினைவுப்படுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்