(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் செயற்பாடுகள் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார். 

இதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை 05 நாட்கள் கோப் குழு கூடவுள்ளது.

அதன் பிரகாரம் வரையறுக்கப்பட்ட ‘லங்கா கோல் கம்பனி பிரைவட் லிமிடெட்’ கோப் குழுவின் முன்னிலையில் முதலில் அழைக்கப்படவுள்ளது. 

2009ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை நுரைச்சோலை மின்நிலையத்துக்காக லங்கா கோல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொள்முதல் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதன் அதிகாரிகள் ஒக்டோபர் 06 ஆம் திகதி பிற்பகல் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், லக்விஜய மின்நிலையத்தின் முக்கியத்துவம் மற்றும் அதனால் ஏற்படுகின்ற சூழல் பாதிப்புக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் குறித்து ஒக்டோபர் 08ஆம் திகதி கோப் குழுவில் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.