இலங்கையில் 80 % சிறுவர்கள் அறியாமையினாலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர்! 'சேவ் த சில்ரன்ஸ்' அமைப்பு தகவல்

Published By: Jayanthy

01 Oct, 2020 | 04:03 PM
image

இன்றைய தினம் நாம் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும் நிலையில், எமது நாட்டில் சிறுவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதில் நாம் சரியான பங்களிப்பை வழங்கியுள்ளோமா என்பதை மீட்டி பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.

 அந்தவகையில் எமது நாட்டில் சிறுவர்களின் இன்றைய நிலைமை குறித்தும் அவர்களின் தேவை குறித்தும் இலங்கைக்கான 'சேவ் த சில்ரன்ஸ்' அமைப்பின் கொள்கை மற்றும் ஆய்வு இயக்குனர் ரன்ஜன் வெத்த சிங்கவுடன் கலந்துரையாடினோம்.

குறித்த கலந்துரையாடலில் முழு வடிவம்...

கேள்வி: இலங்கையில் இந்த ஆண்டு எத்தனை சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்?

பதில்:  கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டுக்கான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், குடும்ப வன்முறைகள் காரணமாக 40 சதவீதமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதாவது குழந்தைகளை தாக்குதல், குழந்தைகளை தகாத வார்த்தையால் திட்டுதல் குழந்தைகளை அடித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளால் குழந்தைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடல், காணாமல் போதல் போன்ற முறைபாடுகள் இதில் அடங்கும்.

கேள்வி: பாலியல் செயற்பாடுகள் தவிர்ந்த எவ்வகையான செயற்பாடுகளினால் சிறுவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்?

பதில்:. சிறுவர் துஷ்பிரயோகமானது பிரதானமாக உடலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், உள­வியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், பாலியல் ரீதி­யான துஷ்பி­ர­யோகம், உணர்வு ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், புறக்கணிப்பு ரீதி­யி­லான துஷ்பிரயோகம் என நான்கு வகையில் பிரித்தறியப்படுகின்றது.

 குறிப்பாக முன்பு குறிப்பிட்டது போன்று இலங்கையில் உள்ள சிறுவர்கள் குடும்ப வன்முறைகளினால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மிகவும் நெருங்கிய நபர்களினாலேயே சிறுவர்கள் துஷ்­பி­ர­யோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதனாலேயே பல சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. 

சிறுவர்கள் துஷ்­பி­ர­யோகங்கள் அதிகரிக்கின்றமைக்கு இது ஒரு காரணியாக உள்ளது.

 அதுமட்டுமல்லாது பெரியவர்களின் கோபங்களை வெளிப்படுத்துகின்ற இடமாகவும் சிறுவர்கள் விளங்குகின்றார்கள். பெற்றோர் மற்றும் பெரியவர்கள் தமது  கோபங்களை சிறுவர்களை அடித்தல் தண்டனை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளினால் வெளிப்படுத்துகின்றனர். 

கேள்வி: பெரியோரின் இவ்வாறான செயற்பாடுகள் சிறுவர்களின் எதிர்காலத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன?

பதில்:  வீடுகளில் பெற்றோர் சிறுவர்களிடம் தமது கோபத்தை வெளிப்படுத்தல், தண்டணை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை சிறுவர்கள் தன்னுடைய நண்பரிடம் அல்லது பாடசாலையில் வெளிப்படுத்த முனைகின்றனர். இதன் காரணமாக இவர்கள் சமூகத்தில் கெட்டவர்களாக அடையாளப்படுத்தப் படுகிறார்கள்?

சிறுவர்களிடம் இறுக்கமாக நடந்துகொள்ளும் பெற்றோர், ஆசிரியர் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களினால் சிறுவர்களின் மனநிலை மற்றும் தேவையை புரிந்து கொள்ள முடிவதில்லை, இதன் காரணமாக பெற்றோர் - சிறுவர்கள் மற்றும் ஆசிரியர் - சிறுவர்கள்  இடையிலான உறவில் முறிவு ஏற்படுகின்றது. 

 அதிகமாக இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகும் சிறுவர்கள் மனநோயாளிகளாக எதிர்காலத்தில் அடையாளப்படுத்த படுகின்றார்கள்.

 அவர்களுடைய குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்குறியாகிறன்றது.  கல்வி நடவடிகைகள் பாதிப்படைகின்றன.

 எதிர்காலத்தில் தன்னுடைய குழந்தைக்கும் இவ்வகையான  அடக்குமுறைகளை அவர்கள் பிரயோகிக்க முனைகின்றார்கள்.  இதன் காரணமாக சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் சங்கிலித் தொடராக சந்ததிக்கு சந்ததி எடுத்துச் செல்லப்படுகின்றது.

கேள்வி: தொழில்நுட்ப ரீதியிலும் கல்வியிலும் வளர்ச்சி  கண்ட சமூகம் என்ற வகையில் இன்றைய தலைமுறையினருக்கும் முன்னைய தலைமுறையினருக்கும் இடையில் குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பில் எத்தகைய வேறுபாடு காணப்படுகின்றது?

 பதில்: பெரிதாக வேறுபாடு ஒன்றும் காணப்படவில்லை அதாவது இலங்கையில் 92% வீதமானவர்கள் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளார்கள்.  இருந்தபோதிலும் சிறுவர் மீதான  குடும்ப வன்முறைகள்  எதிர்பார்க்கின்ற  அளவுக்கு குறைந்துள்ளதாக குறிப்பிட முடியாது.

 இதுகுறித்து விழிப்புணர்வுகளை இன்னமும் ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது. 

கேள்வி: கொரோனா தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் அன்றாட செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இது  எதிர்காலத்தில் எத்தகைய பாதிப்பை சிறுவர்களுக்கு ஏற்படுத்தும்?

பதில்: கொரோனா தொற்று கரணமாக நாடுகள் முடக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக சிறுவர்கள், மட்டுமன்றி பெரியவர்களும் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  இந்நிலையை புரிந்து செயற்பட வேண்டியது பெரியவர்களின் பொறுப்பாகும். 

இலங்கையில் கொரோனா  தொற்று  காரணமாக நாடளாவிய ரீதியில் முடக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் குடும்ப உறுப்பினர்களினால் சிறுவர் மீதான வன்முறைகள் அதிகரித்திருந்தமை அவதானிக்க கூடியதாக இருந்தது. இது சிறுவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் தற்கொலைக்கு தூண்டும் செயலாகவும் மாறி  இருந்ததை பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. 

குறித்த காலகட்டத்தில் சிறுவர்கள் இணையத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இணையவழி சிறுவர் துஷ்பிரயோக செயல்கள் அதிகரித்துள்ளன. 

இது குறித்து பெற்றோர்களுக்கு தெரியாத போதும், இலங்கையில் தற்போது அதிகரித்து வருகின்ற சிறுவர் துஷ்பிரயோக செயல்களில் இதுவும் பிரதானமான ஒன்றாகும்.

இவ்வாறான முறைப்பாடுகளை பெற்று அதற்கான சட்ட நடிவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக சிறுவர்களுக்கான விசேட சைபர் விசாரணை பிரிவு ஒன்றை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நிறுவியுள்ளது.

இலங்கை சிறுவர் தொலைபேசிச் சேவையான  1929  ஊடாக முறைப்பாடு செய்வதன் மூலம் குறித்த பிரிவின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும்.

கேள்வி: நாம் எமது வீடுகளில், அல்லது எமது பிரதேசத்தில், கடந்து செல்லும் பாதையில் சிறுவர் ஒருவர் ஏதாவது ஒருமுறையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கபடுவதை அவதானிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு உதவும் நோக்கில் எவ்வாறு செயற்பட வேண்டும்.

பதில்: சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு உங்களால் முடியுமான அறிவுறையை வழங்குவது சிறந்தது.  சிறுவர் துஷ்பிரயோகத்தின் தன்மைக்கு ஏற்ப அடுத்தக்கட்டமாக அயலில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம்.

தேசிய சிறுவர் மையத்தின் உளசமூக உதவிச்சேவையின் ஊடாக பிரதேச சபை காரியாலயத்தில் முறைப்பாடு செய்யலாம். ஒவ்வொரு பிரதேசசபை காரியாலயத்திலும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு  உத்தியோகத்தர்கள் உள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும்.

அத்துடன் இம்மாத இறுதியில், சிறுவர்கள் குறித்த முறைபாடுகளை தெரிவிக்க புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.   இதன் ஊடாக சிறுவர்கள் தொடர்பில் இலகுவாக முறைப்பாடு வழங்க முடிவதுடன், தீர்வினையும் துரிதகதியில் பெற்று தர எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கேள்வி: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவரும் நிலையில், இக்குற்றச்செயல்களுக்கு இலங்கையில் மேற்கொள்ளப்படும் சட்டநடவடிக்கைகள் போதுமானதாக உள்ளதா?

பதில்: சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான இலங்கையின் சட்டங்களில் சில சட்டங்கள் போதுமானதாக இருந்த போதிலும் அதனை செயற்படுத்துவதில் சிக்கல் உள்ளது.

சிறுவர் தொடர்பான வழக்குகளுக்கு தீர்வினை எட்டுவதற்கு சில நேரங்களில் 5 முதல் பத்து வருடங்கள் வரை ஆகலாம், இதன் போது தவறு செய்தவரும், பாதிக்கப்பட்ட சிறுவரும் உடல் உளரீதியாக பல மாற்றங்களுக்கு உள்ளாகின்றனர்.

சிறுவர்களின் வழக்குகளில் நீதியை செயற்படுத்தில் துரிதப்படுத்தப்படுமாயின் அது சிறந்ததே

கேள்வி:  சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க துரிதமாக செயற்படும் விசேட நீதிமன்றத்தின் அவசியம் குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில்: இலங்கையில் சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க பத்தரமுல்லை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருவேறு நீதி மன்றங்கள் உள்ளன. இருப்பினும் இவற்றில் சிறுவர்களின் குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளே விசாரிக்கப்படுகின்றன. 

சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய வழக்குகள் ஏனைய நீதிமன்றங்களின் ஊடாகவே விசாரிக்கப்படுகின்றன.  சிறுவர்கள் தரப்பில் உந்துதல் அளிக்கும் பட்சத்தில் குறித்த வழக்குகளை விரைவுபடுத்தும் வாய்ப்புகள் உள்ளன. 

எனினும் சிறுவர் துஷ்பிரயோகங்கம் தொடர்பான வழக்குகள் துரிதப்படத்த நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அது சிறந்ததே

கேள்வி: இலங்கையின் சிறுவர்களின் வயதெல்லை 18 ஆக உயர்த்தப்பட்டது குறித்த உங்களின் கருத்து என்ன?

பதில்: இது ஒரு சிறந்த முடிவு, உலகளவில் ஏற்றுகொள்ளப்பட்டுள்ள சிறுவர்களின் வயதெல்லை இலங்கையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை ஒரு சிறந்த முன்னேற்றமாக  கருதுகின்றேன்.

கேள்வி: இலங்கையின் பாடதிட்டத்தில் பாலியல் கல்வியை உட்புகுத்துதல் தொடர்பில் அண்மை காலமாக பேசப்பட்டு வருகின்றது. அப்படி சேர்க்கப்படுமாயின் அது சிறுவர்களுக்கு எத்தகைய நன்மையை கொடுக்கும்.

பதில்: பாலியல் ரீதியிலான அறிவு குறைந்தைவர்களாகவே சிறுவர்கள் உள்ளனர். இவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். எமது நாட்டில் குறிப்பாக 16 வயதுக்கு குறைந்த 80 % சிறுமிகள் அவர்களின் விருப்பத்தினுடனேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

இதற்கு சிறுவர்களின் அறியாமையும் அதில் அவர்கள் எதிர்காலத்தில் முகம் கொடுக்கும் பிரச்சினை குறித்து தெளிவின்மையுமே முக்கிய காரணமாகும்.

எனவே பாலியல் கல்வி  இலங்கையின் பாடதிட்டத்தில் சேர்க்கப்படுவதன் மூலம் சிறுவர்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவதால் இவ்வாறான செயல்களில் இருந்து சிறுவர்கள் தம்மை பாதுகாத்து கொள்ளவும் பாலியல் துஷ்பிரயோகங்களை குறைப்பதற்கும் ஏதுவாக அமையும்.

-ஜெயந்தி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22