(எம்.மனோசித்ரா)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விமான சேவைகள் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் 2017ஆம் ஆண்டு நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்தது. நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் திட்டத்தின் பல பகுதிகள் தற்காலத்திற்கு பொருத்தமற்றது என கலந்துரையாடலில் கலந்துகொண்ட துறைசார்ந்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டுக்கு பொருத்தமான வகையில் அனைத்து தொழிநுட்ப வசதிகளுடனும் வினைத்திரன் மிக்க விமான நிலைய முனையமாக அதனை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கொவிட் நோய்த்தொற்றுடன் சர்வதேச விமான சேவைகள் முடங்கியதன் காரணமாக விமான சேவைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பான நிலைமைகளுக்கு மத்தியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

விமான நிலைய பணிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சூழலைப் பயன்படுத்தி இரவு பகலாக நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு விரைவாக நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இரண்டாவது முனைய நிர்மாணப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டதும் வருடமொன்றுக்கு 15மில்லியன்களுக்கும் அதிகமான விமானப் பயணிகளுக்கு சேவைகளை வழங்க முடியும். இந்த நிர்மாணப் பணிகளைத் தொடர்ந்து உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் முனையங்கள் இரண்டு பகுதிகளாக செயற்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். ஈ-கேட் வசதிகளின் ஊடாக பயணிகளுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதனுடன் இணைந்ததாக வாகனத் தரிப்பிடமும் விமான நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும். மத்தளை விமான நிலையம் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 270 விமான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன், இதன் மூலம் பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் சேவையை பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை மத்தளை விமான நிலையத்தில் இருந்து வாரத்திற்கு 7 விமான பயணத் தொடர்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை பணிக்குழாமினருக்கு மத்தளை விமான நிலைய சூழலில் அனைத்து வசதிகளுடனும் ஹோட்டல் வசதிகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இரத்மலானை விமான நிலையத்தை நவீன தொழிநுட்ப வசதிகளுடன் விரிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தை மையப்படுத்தி சந்ததென்னை, சீதாஎலிய மற்றும் திகனை உள்ளக விமான செயற்பாடுகளை மேம்படுத்துவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை இணைந்து விமானிகளை பயிற்றுவிப்பதற்கான நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அதில் வெளிநாட்டு மாணவர்களுக்கும் சந்தர்ப்பமளிக்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாடளாவிய ரீதியில் உள்ள முதலீட்டு வலயங்களின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், புதிய முதலீட்டு சந்தர்ப்பங்களை இனம்கண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

முதலீட்டுச் சபைக்கு தற்போது கிடைத்துள்ள முதலீட்டு சந்தர்ப்பங்களை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.