இன்று சர்வதேச சிறுவர் தினமாகும். அதனையொட்டி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  ஏற்பாட்டில்  மாபெரும்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை (01.10.2020) 11மணியளவில் ஆரம்பமானது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்களும் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டும் கைது செய்யப்பட்டும் காணப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என கோரி கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “வரவேண்டும்.. வரவேண்டும்.. ஐநா அமைதிப்படை வரவேண்டும்”,”எங்கள் குழந்தைகள் எங்கே இதற்கு பதில் கூற யாரும் இல்லையா?”,”எங்கே எங்கே எங்கள் அப்பா எங்கே?,”எங்கே எங்கள் சிறார்கள் கோத்தா அரசே பதில் சொல்..!” போன்ற பதாகைகளை தாங்கியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.