கட்டானவில் அமைந்துள்ள வீடொன்றில் துப்பாக்கி முனையில் மூன்று கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 60 பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய ஆறு சிறப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு - பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டான, 50 ஏக்கர் பகுதியில் வர்த்தகரொருவரின் வீட்டிலேயே நேற்றைய தினம் மூன்று கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகைகள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. 

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்வதற்கு சி.சி.டி.விக் காட்சிகளை என்பவற்றை அடிப்படையாக கொண்டு கட்டான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையிலேயே தற்போது சந்தேக நபர்களை கைதுசெய்ய 60 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய 6 குழுக்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. 

நேற்று காலை காரொன்றில் வந்த 6 பேரே இவ்வாறு பணம் மற்றும் நகை என்பவற்றை கொள்ளையடித்துள்ளனர். 

சம்பவத்தின் போது குறித்த வீட்டு உரிமையாளரான வர்த்தகரும் வீட்டு காவலாளியும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

முகமூடி அணிந்த நிலையில் வந்த சந்தேகநபர்கள் துப்பாக்கியை காண்பித்து அவர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.