1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபை ஏற்றுக்கொண்ட சிறுவர் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் மூலம் சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை நினைவூட்டுவதற்கான ஒரு நாளாக ஒக்டோபர் 1 ஆம் திகதியை இலங்கை, சிறுவர்  தினமாக கொண்டாடுகின்றது. 

இன்றைய தினத்தில் உலகளாவிய ரீதியில் வாழும் சிறுவர்கள் அனைவருக்கும் தமது சிறுவர்தின நல்வாழ்தத்துக்களை தெரிவித்துக்கொள்வதில் வீரகேசரி இணையத்தளம் 'PEaCE' (peace)  அமைப்புடன் இணைந்து மகிழ்ச்சி அடைகின்றது. 

இது வரையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இனங்கண்டு அவற்றை அனுக கூடியதாக இருந்துள்ள நிலையில், மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் எளிதில் அடையாளப்படுத்த முடியாத தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு இணையாக வளர்ந்த கூடுதல் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர். 

இணையத்தில் நிகழும் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் ஆகியவை சிறுவர்களுக்கு எதிராக தற்போது எழுந்துள்ள  மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும், இவ் பிரச்சினைகள் கொரோன தொற்றுநோய் மற்றும் பிந்திய தொற்றுநோய்களின் காலங்களில் குறிப்பிடத்தக்க உயர்வைக் காட்டியுள்ளது. 

தொற்றுநோய் காலங்களில் சிறுவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக வீட்டிலும் இணைய சாதனங்கள் ஊடாகவும் அதிகமான சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.  மேலும், பாடசாலைகள் மூடப்பட்டதாலும், இணையவழி கற்றல் அதிகரித்ததாலும் இணையத்தை பயன் படுத்தம் குழந்தைகளின் எண்ணிக்கையும், குழந்தைகள் இணையத்தில் செலவழிக்கும் நேரமும் அதிகரித்துள்ளது.

 சிறுவர்களை இலக்கு வைத்து இணையவழி  ஊடாக பாலியல் ரீதியாக சிறுவர்களை “வேட்டையாடுபவர்களுக்கு  ” குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளவும், ஈடுபடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது, இது உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளில் தெளிவாகியுள்ளது. 

இந்நிலையில் இணையத்தினூடான  சிறுவர்களை இலக்கு வைக்கும்  சைபர் மிரட்டல்களுக்கு எதிராக போராட வேண்டிய சூழ்நிலையில் நாம் இன்று சிறுவர் தினத்தை கொண்டாடுகின்றோம். 

கணினிகள், மடிக்கணினிகள், தாவல்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் அனைத்தும் சிறுவர்களுக்கு இணையத்தினூடான அணுகலை இலகுவாக வழங்குகின்றன, இதன் மூலம் ஏராளமான வலைத்தளங்கள் சிறுவர்களை இலக்கு வைத்து செயற்படுகின்றன. 

சிறுவர்கள்  இந்த சாதனங்களை கற்றல்,மற்றும்  பொழுது போக்கு, வேடிக்கைகளுக்காக அதிகளவில் பயன்படுத்துகின்றனர். சில பெற்றோர்கள் இணையத்தின் ஆபத்துகளைப் பற்றி அறிந்திருந்தாலும், தமது வசதிக்காக குழந்தைகளுக்கு தன்னிச்சையாக செயற்பட இடமளிக்கின்றனர்.  சில பெற்றோருக்கு  சிறுவர்களின் வாழ்க்கையில் இணைய பயன்பாட்டினூடாக ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்து தெளிவு இன்மையும் இதற்கு காரணமாகின்றது. 

சிறுவர்கள் இணையத்தளங்களில் பிரவேசிக்கும் போது இணைய அச்சுறுத்தல் மற்றும் இணையவழி  பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு  ஆளாக நேரிடும், இது அவர்களின் உணர்ச்சி மற்றும் உளவியல் நல்வாழ்வில் கடுமையான எதிர்மறையான தாக்கங்களுக்கு வழிவகுக்கும்.

 சைபர் மிரட்டல் என்பது சிறுவர்களுக்கு வெறுக்கத்தக்க செய்திகளை அனுப்புதல் அல்லது அச்சுறுத்தல்கள், ஆன்லைனில் அவர்களைப் பற்றி பொய்களைப் பரப்புதல் அல்லது அவர்களின் சமூக ஊடக சுயவிவரங்களில் மோசமான கருத்துகளைத் தெரிவித்தல் ஆகியவை அடங்கும். 

பாடசாலை போன்று அல்லாமல் இங்கு சிறுவர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள்  ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் உள்ளிட்ட தரப்பினருக்கு தெரியவருவது மிகவும் அரிது.

சைபர் மிரட்டலின் போது சிறுவர்களை அணுக பெரும்பாலும் அரட்டை அறைகள் மற்றும் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துகின்றனர். போலி சுயவிவரங்களைப் பயன்படுத்தி, அவர்கள் சிறுவர்களின் அதே வயதில் நடிக்கின்றனர். 

இத்தகைய ஈடுபாடு பின்னர் பாலியல் வன்கொடுமை, சீர்ப்படுத்தல் மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருள்களைப் பரிமாறிக்கொள்ள வழிவகுக்கும், இதன் விளைவாக பாலியல் உறவு ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில் இதுபோன்ற சம்பவங்கள் சிறுவர்களின் உயிரை கொல்லும் அளவிற்கு கடுமையான விளைவுகளுக்கு வழிவகுத்துள்ளதுடன் மேலும் சிறுவர்கள் மற்றும் இளம் வயதினரை தற்கொலைக்கு தூண்டுகின்றது. 

இணைத்தினூடான சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக இலங்கையில் குறிப்பாக எந்த ஒரு  சட்டமும் இதுவரை இல்லை, எனினும் இணைத்தினூடான சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக ஆபாச வெளியீடுகள் குறித்த புதிய சட்டதை்தை உருவாக்க அரசாங்கம் அண்மையில் எடுத்த முடிவை PEaCE-ECPAT சிறுவர் அமைப்பு வரவேற்றுள்ளது. 

அத்தடன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் இது ஒரு முக்கியமான மைல்கல்லாக இருந்தாலும், அதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நீண்டகாலம் போராட வேண்டியுள்ளதாக குறித்த அமைப்பு தெரிவிக்கின்றது. 

தற்போதைய காலங்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதாக இலங்கையின் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் இதுவரை வெளியான தகவல்கள்  பனிப்பாறையின் முனை மட்டுமே என்று தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது, அதாவது  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் ஏழு குழந்தைகளில் ஒருவர் பற்றி மட்டுமே முறைப்பாடு மற்றும் வழக்குகள் பதிவாகியுள்ளதாக குறித்த ஆணையம் தெரிவிக்கின்றது. 

இந்த சூழலில், இணையத்தில் சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் புரிந்துகொள்வதும், விழிப்புடன் இருப்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

மேலும் இதிலிருந்து சிறுவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறுவருக்கு பொறுப்பானவர்கள் எடுக்க வேண்டும். இந்த கொரோனா தொற்று சகாப்தத்தில் சிறுவர்களுக்கு இணைய பாதுகாப்பு மிகவும் முக்கியமான சவால்களில் ஒன்றாகும். 

இந்நிலையில் இணையத்தின் ஆபத்துகள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து சிறுவர்களுடன்  வெளிப்படையாக உறையாடல் மற்றும் இவற்றின் பாதிப்பு குறித்து அவர்களுக்கு தெளிவு படுத்தல்  பெற்றோர் ஆசியரியர்கள் மற்றும் பொறுப்பான தரப்பினரால் முன்னெடுக்கப்பட வேண்டும் .

அத்துடன் சிறுவர்களுக்கு , என சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இணையபயன்பாட்டு சாதனங்களை பயன்படுத்தல், கல்வி நடவடிக்கைகளுக்கு பொருத்தமான மற்றும் பாதுகாப்பான இணையத்தளங்களுக்கு மட்டும் பிரவேசிக்க அனுமதியலித்தல், பெரியோரின் அவதானிப்பின் கீழ் இணைய பயன்பாட்டுக்கு அனுமதித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சிறுவர்களை சைபர் மிரட்டல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

- ஜெயந்தி