சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஆறு முக்கிய சிரியர்கள் மற்றும் 11 நிறுவனங்கள் மீது அமெரிக்க அதிகாரிகள் புதன்கிழமை பொருளாதாரத் தடைகளை விதித்தனர்.

அல்-அசாத்தின் அரசாங்கத்திற்கு வருவாய் ஆதாரங்களை துண்டித்து அதை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க கருவூலத்தால் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களில் சிரிய பொது புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர், சிரியாவின் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் சிரிய தொழிலதிபர் கோத்ர் தாஹர் பின் அலி ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

சுற்றுலா, தொலைத்தொடர்பு, தனியார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் தொழில்கள் உள்ளிட்ட 11 வணிக நிறுவனங்கள் அல்-அசாத்தின் அரசாங்கத்திற்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் வருவாயை பெற்றுத் தருவதாகவும் குறிப்பிட்டு அவற்றுக்கு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

வடமேற்கு மாகாணமான இட்லிபில் உள்ள அர்மானாஸ் என்ற நகரத்தில் குழந்தைகள் உட்பட குறைந்தது 34 பொதுமக்கள் கொல்லப்பட்ட விமானத் தாக்குதல்களின் மூன்றாம் ஆண்டு நிறைவின் ஒரு நாள் கழந்த நிலையில் இந்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பஷர் அல்-அசாத்தின் மிருகத்தனமான ஆட்சியுடன் தொடர்ந்தும் உடன் நிற்பவர்கள் அதன் ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களை மேலும் செயல்படுத்துகிறார்கள் என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் அமெரிக்க கருவூல இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.