(நா.தனுஜா)

இலங்கையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ  குட்ரெஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத்தொடரின், நேற்று புதன்கிழமை அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ  குட்ரெஸினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்றவர்களில் சிலர் ஜெனீவாவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னரும் கூட்டத்தொடர் முடிவடைந்து நாடு திரும்பிய பின்னரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக அன்டோனியோ  குட்ரெஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதுமாத்திரமன்றி கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது தாம் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டதாக சில சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் முறைப்பாடளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேற்படி அடக்குமுறை மற்றும் பழிவாங்கல்கள் தொடர்பில் கடந்த 2019 டிசம்பரில் மனித உரிமைகளுக்கான உதவி செயலாளர் நாயகம் அரசாங்கத்திற்கு கடிதமொன்றையும் எழுதியிருந்தார் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

'சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வந்தமை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்குத் தொடர்ந்தும் முறைப்பாடுகள் செய்யப்பட்டு வந்திருக்கிறது. 

அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையுடன் சம்பந்தப்பட்ட வகையிலான அவர்களது செயற்பாடுகள் குறித்து பொலிஸார் மற்றும் புலனாய்வுப்பிரிவினரால் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்' என்று அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்திருக்கிறார்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான கண்காணிப்புக்களும் அச்சுறுத்தல்களும் 2019 ஆம் ஆண்டில் அதிகரித்திருக்கின்றன என்றும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டவர்களிடம் அவர்களின் விஜயத்தின் நோக்கம் குறித்து விசாரணைகள் செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் கடந்த பெப்ரவரி மாதம் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.