வவுனியா பகுதியிலிருந்து போலி தேன் உற்பத்தியை செய்து சிறுவர்களை பயன்படுத்தி மன்னார் பகுதியில் தேன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சிறுவர்களை மடு பிரதேச பொது சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் கைது செய்து போலித் தேன்களை அழித்தொழித்ததுடன் பெற்றோர்களுக்கு முன் இவர்களை எச்சரித்து விடுவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் மடு வீதியிலிருந்து மடு ஆலயம் செல்லும் வழியிலேயே இடம்பெற்றுள்ளது.

இவ் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் மடு வீதியிலிருந்து மடு தேவாலாயத்துக்கு செல்லும் பாதை எங்கும் சிறுவர்களை பயன்படுத்தி போலியான தேன் போத்தல் வியாபாரங்கள் இடம்பெற்று வருவதையிட்டு முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதையடுத்து மடு பிரதேச பொது சௌக்கிய சுகாதார சேவைகள் அதிகாரி மற்றும் சக பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் பொலிஸ் உதவியுடன் இணைந்து சம்பவதினத்தன்று காலை 9 மணி முதல் மடு தேவாலயத்துக்குச் செல்லும் பாதையில் நடவடிக்கையில் இறங்கியபோது ஆறு சிறுவர்கள் தேன் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுது மாட்டிக் கொண்டனர்.

இது குறித்து பெறப்பட்ட வாக்கு மூலத்தின்படி இவர்கள் ஐந்து குழுக்களாக பிரிந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் வவுனியா மெனிக்பாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கோதுமை மா, சிற்றிக் அசிட், சீனி, மற்றும் தேன் இவற்றைக் கலந்து குறிப்பிட்ட பதத்தில் பதனிட்டு இவ்வாறு போத்தல்களில் அடைக்கப்பட்டே இவ் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது வயதினை கவனத்திலெடுத்து மனிதாபிமான அடிப்படையில் வழக்கு தொடராது இவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதுடன் போலியான அனைத்து தேனும் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.