வவுனியா - கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு ஆலயத்தின் இரதோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பக்தர்கள் சூழ இன்று (30) காலை 7.30 முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 10 மணியளவில் வசந்தமண்டப பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகாவிஷ்ணு உள்வீதி வலம் வந்து 11 மணியளவில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

22 ஆம் திகதி காலை 11 மணிக்கு  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழா விஞ்ஞாபனமானது இன்று 30 ஆம் திகதி தேர்த்திருவிழா இடம்பெற்றிருந்த  நிலையில் நாளையதினம் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

பூசைபுணருத்தான பணிகளில் ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ முத்து இரத்தின வைத்தியநாதக்  குருக்கள், ஆலய ஸ்தானிககுரு சிவஶ்ரீ ஜெகதீஸ்வரமயூரக்குருக்கள் பங்கெடுத்திருந்தனர்.

இதன்போது, அடியார்கள் அங்கபிரதட்சினை , காவடிகள் மற்றும் கற்பூர சட்டி என்பவற்றை ஏந்தி தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.  தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததை தொடர்ந்து அர்ச்சனைகளும் இடம்பெற்றிருந்தது.