கல்கிஸ்ஸ - இரத்மலானை பகுதியில் இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மக்கள் சந்திப்பின் போது இடையூறு ஏற்படுத்தும் வகையில் கற்களை வீசிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரத்மலானை - கொத்தலாவலபுர, ரணசிங்க பிரேமதாச தொடர் மாடிக் குடியிருப்புக்கு முன் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச கலந்து கொண்டு உரையாற்றினார். 

இதன்போது இனந்தெரியாத சிலரால் கற்கள் வீசி  இடையூறு ஏற்படுத்தப்பட்டதால் அங்கு பதற்ற நிலை உருவாகியது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். 

இந்நிலையில் இரு சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்களை வீசி இடையூறு ஏற்படுத்திய சந்தேக நபர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததுள்ளதமாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

மேலும்  ஐஸ் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருளையும் பயன்படுத்தியிருந்தமை வைத்திய பரிசோதனைகளின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பட்டாசு கொளுத்தும் சத்தம் கேட்கவே தாம் கற்கள் வீசியதாகவும் அப் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவருடனான கலந்துரையாடல் இடம்பெறுவது தமக்கு அப்போது தெரியாது எனவும் சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

40 மற்றும் 21 வயதான நபர்களே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.