(எம்.மனோசித்ரா)

நாட்டின் வருமானம், செலவு, கடன் என்பவை தொடர்பில் பாராளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் கேள்வியெழுப்பிய போதிலும் அரசாங்கத்தினால் இவற்றுக்கான பதில் வழங்கப்படவில்லை. பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையாதவாறு பேணுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்களை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்  இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார தரப்படுத்தலில் அரசாங்கம் மீண்டும் வீழ்ச்சி கண்டுள்ளது. நிதி முகாமைத்துவம் இன்மையால் வருமானம் மூன்றில் ஒரு பங்காகக் குறைவடைந்துள்ளமையே இந்த வீழ்ச்சிக்கான காரணியாகும். இந்நிலையில் கடன் மீளச் செலுத்தல் அபாயத்திற்கும் இலங்கை முகங்கொடுக்க வேண்டியுள்ளது. பெருந்தொகை கடன் மீளச் செலுத்தப்பட வேண்டியுள்ள நிலையில் மீண்டும் கடன் பெற்றால் அது பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும்.

மீண்டும் கடன் பெறப்பட்டால் கப்பல் தொழிற்துறை, ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் வங்கிச் செயற்பாடுகள் என்பவற்றுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படும். இதற்கு அரசாங்கத்தின் பதில் என்ன ? நாட்டின் வருமானம், செலவு, கடன் என்பவை தொடர்பில் பாராளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் கேள்வியெழுப்பிய போதிலும் அரசாங்கம் அதற்கு முறையான பதில் வழங்கவில்லை. அரசாங்கத்திடம் இவற்றுக்கு பதிலும் இல்லை.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்கள் , ஏற்றுமதி , சுற்றுலாத்துறை மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடு என்ற 4 விடயங்களே இலங்கையின் வருமானத்தில் தாக்கம் செலுத்துகின்றன.

எனினும் இவை நான்குமே தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது வீழ்ச்சியடைந்துள்ளன. இவ்வாறான நிலைமையில் தற்போது இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மாத்திரமே அரசாங்கம் எடுத்த சிறந்த தீர்மானமாகும். எவ்வாறிருப்பின் தற்போது நாட்டின் பொருளாதார வருமான நிலைமை அவதான மட்டத்திலேயே உள்ளது என்றார்.