இந்தியாவில் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992 இல் இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக  இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தீர்ப்பின்படி குற்றச்சாட்டப்பட்ட 48 பேரில் உயிருடன் இருக்கும் 32 பேரும் விடுதலை ஆகின்றனர். அவர்களில் இந்திய முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மற்றும் பிற பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினய் கட்டியார் மற்றும் சாக்ஷி மகாராஜ் மற்றும் பலர்  விடுதலையாகியுள்ளனர்.

எல்.கே.அத்வானி,உமா பாரதி,முரளி மனோகர் ஜோஷி

எனினும் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு தரப்பு உயர் நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.

பாபர் மசூதி

அயோத்தியில் உள்ள பாபர்  மசூதி 1992 டிசம்பர் 6 அன்று இடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகின்றன.

அயோத்தி பாபர் மசூதியை மையமாகக் கொண்டு இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான 'சிவில்' வழக்கு. இன்னொன்று மசூதியை இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குட்டற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான 'குற்றவியல்' வழக்கு.சிவில் வழக்கில் ஏற்கனேவே இந்துக்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்து அங்கு இராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. குற்றவியல் வழக்கில் விசாரனை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றாலும், மசூதி இடிக்கப்பட்டது தவறு என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக வேறு இடத்தில் மசூதியை கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.