தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன், சுகாசினி மணிரத்தினம், ராஜீவ்மேனன், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சுதா கொங்கரா ஆகிய ஐந்து இயக்குநர்கள் இணைந்து 'புத்தம் புது காலை' என்ற பெயரில் தொடர் குறும்படம் ஒன்றை இயக்கி இருக்கிறார்கள்.

இந்த தொடர் குறும்படம் ஒக்டோபர் 16ஆம் திகதியன்று அமேசான் பிரைம் வீடியோ எனும் டிஜிற்றல் தளத்தில் வெளியாகிறது.

பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய தமிழ் திரைப்படங்களை நேரடியாக வெளியிட்டு, டிஜிற்றல் தள ரசிகர்களை உருவாக்கிய முன்னணி நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம், தன்னுடைய இலட்சக்கணக்கான புதிய இளம் ரசிகர்களை தக்க வைப்பதற்காக, தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்கள் இயக்கத்தில் 'புத்தம் புது காலை' என்ற தொடர் குறும்பட தொகுப்பு ஒன்றை தயாரித்து வெளியிடவிருக்கிறது.

இந்த தொடர் குறும்பட தொகுப்பில், 'இளமை இதோ இதோ', 'அவரும் நானும்/ அவளும் நானும்,' 'காபி எனி ஒன்', 'ரியூனியன்', 'மிராக்கிள்' என ஐந்து குறும்படங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இதில் நடிகர் ஜெயராமின் வாரிசும், நடிகருமான காளிதாஸ்,' சூரரைப்போற்று' பட புகழ் நடிகை ஊர்வசி, 'ஹீரோ' பட புகழ் கல்யாணி பிரியதர்ஷன், மூத்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் , 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட புகழ் நடிகை ரீத்து வர்மா, ' இந்திரா' பட புகழ் நடிகை அனுஹாசன், நடிகை சுருதிஹாசன், நடிகை ஆண்ட்ரியா,' ஓகே கண்மணி' பட புகழ் நடிகை லீலா சாம்சன், கர்நாடக இசைப் பாடகர் சிக்கில் குருசரண், நடிகர் பொபி சிம்ஹா,' பட்டாஸ்' பட புகழ் நடிகர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

'புத்தம் புது காலை' ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு படமாக்கப்பட்டது என்பதும், இந்த குறும்படங்களில் நம்பிக்கை, காதல் , மறு வாய்ப்பு , புதிய தொடக்கம் ஆகிய சமூகத்துக்கு தேவையான விடயங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.