ஆர்மீனியாவும் அசர்பைஜானும் செவ்வாயன்று ஒருவருக்கொருவர் நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேலும் நாகோர்னோ-கராபெக் பகுதியில் எழுந்துள்ள இந்த பதற்ற நிலையானது இரு நாடுகளுக்கிடையேயான போருக்கு வழிவகுக்கும் என்பதால், சர்வதேச நாடுகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விடுத்த அழைப்பினையும் ஆர்மீனியாவும், அசர்பைஜானும் புறக்கணித்துள்ளது.

இரு நாடுகளும் செவ்வாயன்று தங்கள் பகிரப்பட்ட எல்லையைத் தாண்டி மறுபுறம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது, 

சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபெக் பிராந்தியத்தின் மேற்குப் பகுதியில் அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியப் படைகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை முதல் கடுமையான மோதல் இடம்பெற்று வருகிறது.

ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகள் மோதலை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ள நிலையிலும் மோதல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேப், ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் இது தொடர்பில் பேசிய போது, சமாதான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளதாக தெரிவத்துள்ளார், அதேபோன்று ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன்னும், சண்டை தொடரும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அசர்பைஜான் மற்றும் ஆர்மீனியவுக்கு இடையிலான மோதல்கள் ஞாயிற்றுக்கிழமை வெடித்ததில் இருந்து பலர்  உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இது அசர்பைஜானின் நெருங்கிய நட்பு நாடான துருக்கி உள்ளிட்ட அண்டை நாடுகளையும் மோதலுக்குள் ஈர்க்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

இது அசர்பைஜானின் ஒரு பகுதியாக சட்டப்பூர்வமாக கருதப்படுகிறது. ஆனால் இது 1991 இல் சுதந்திரம் அறிவித்ததிலிருந்து ஆர்மீனிய இனத்தினரால் கட்டுப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.