தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும்போது லயன்களை அண்மித்ததாக அவற்றை நிர்மாணிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் தோட்ட மக்களுக்காக 4,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 

இதுவரையில் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 669 ஆகும். உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும்போது ஏற்படும் நடைமுறை பிரச்சினைகள் நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கு காரணமாகுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட மக்கள் வாழும் லயன்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே லயன்களை அண்மித்ததாக புதிய வீடுகளை நிர்மாணிப்பதன் மூலம் இத்திட்டத்தின் நன்மைகளை விரைவாக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமென ஜனாதிபதியும் பிரதமரும் சுட்டிக்காட்டினர்.

தோட்ட மக்கள் வாழும் சூழலிலிருந்தே அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். வீடமைப்பு திட்டமிடலை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதன் மூலம் நிர்மாணப் பணிகளின் தரத்தை சிறப்பாக பேண முடியுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (29) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி  இவ்வாறு குறிப்பிட்டார்.

தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுடன் இணைந்ததாக தனியார் தோட்ட நிறுவனங்களும் தமது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தோட்ட வீடுகள் மற்றும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு, சுகாதாரம், கல்வி, விவசாயம், வீடமைப்பு, விளையாட்டு உள்ளிட்ட அமைச்சுக்களின் உதவியை பெற்று, தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

தோட்ட முன்பள்ளி பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகள், சுகாதார தேவைகளுக்காக மருத்துவ நிலையங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தோட்டங்களை அண்மித்து வாழும் இளைஞர், யுவதிகளுக்கு NVQ மட்ட சான்றிதழை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொழில் பயிற்சியை வழங்கி, தொழில் வாய்ப்புக்களை வழங்குவதன் அவசியம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. தோட்டங்களை அண்மித்ததாக உள்ள 438 சுகாதார நிலையங்களை அரசின் கீழ் கொண்டு வந்து, சிறந்த சேவையை தோட்ட மக்களுக்காக துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பண்டாரவளை, ஹட்டன், நுவரெலியா மற்றும் எல்ல பிரதேசங்களை மையப்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தோட்டங்களும் கிராமங்களும் துண்டிக்கப்படாத வகையில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.