( எம்.எப்.எம்.பஸீர்)

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மனுக்களை, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுக்க இன்னு மனுதாரர் ஒருவரால் எதிர்ப்பு முன் வைக்கப்பட்டது.

இலங்கை வெளிப்படை முன்னணியின் செயலாளர் நாகாநந்த கொடித்துவக்குவினால், நகர்த்தல் மனுவொன்றூடாக இந்த எதிர்ப்பு முன்வைக்கப்பட்டது.

 இந் நிலையில் இன்று 20 ஆவது திருத்த சட்டத்தை சவாலுக்கு உட்படுத்திய 39 மனுக்கள் மீதான பரிசீலனைகள் உயர் நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்ட போது, நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில்  தனது மனுவினை விசாரணைக்கு எடுப்பதை தான் எதிர்ப்பதாகவும், இது தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஊடாக விடயங்களை முன்வைத்துள்ளதாகவும் நாகானந்த கொடித்துவக்கு  நீதியரசர்களின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இந் நிலையில்,  குறித்த நகர்த்தல் பத்திரத்தை ஐவர் கொண்ட நீதியர்சரகள் குழு ஆஜராகும் என  அறிவித்த பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,  20 ஐ சவாலுக்கு உட்படுத்திய நாகானந்த கொடித்துவக்குவின் மனு தொடர்பில் அவருக்கு வாதங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்க முன்னர் 10 நிமிடங்கள் மன்றின் நடவடிக்கையை ஒத்தி வைத்து அது தொடர்பில் ஆராய்ந்தது.

அதன் பின்னர் அந்த நகர்த்தல் பத்திரத்திரம் தொடர்பிலான  உயர் நீதிமன்றின் நிலைப்பாட்டை பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரிய திறந்த மன்றில் அறிவித்து, நாகானந்த கொடித்துவக்குவின் நகர்த்தல் பத்திரத்தை நிராகரிப்பதாக அறிவித்தார். 

இதனையடுத்து அவர் மன்றில் குறித்த ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், 20 ஆம் திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தும் தனது மனு மீது விடய்ஙகளை முன்வைத்தார்.