இலங்கைக்கு இந்தியா விடுக்கும் வேண்டுகோள்கள் பயன்தராமல் போகலாம்

30 Sep, 2020 | 11:55 AM
image

-மோடியின் ‘அயலகம் முதலில்’ கொள்கைக்கு இலங்கையுடனான உறவுகள் ஒரு பரீட்சை

 

-மோடி – ராஜபக்ச இணையவழி உச்சிமாநாடு குறித்து இந்தியாவின் முக்கிய பத்திரிகைகளின் ஆசிரியல் தலையங்கங்கள்

இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான குறிப்பிடத்தக்க இடைவெளி தொடர்ந்தும் நீடிக்கிறது என்றும் தீர்வு காணப்படாமல் இருக்கும் தமிழர் பிரச்சினையே கொழும்புக்கும் டெல்லிக்கும் இடையே கூடுதலான அளவுக்கு அர்த்தபுஷ்டியான உறவுகள் வளர்வதற்கு தடையாக தொடர்ந்தும் இருக்கிறது என்றும் இலங்கையின் அரசியல் தற்போது பெரும்பான்மைவாத திருப்பத்தை எடுத்திருக்கும் நிலையில், தமிழர்களின் அபிலாசையை பூர்த்தி செய்யுமாறு விடுக்கப்படக்கூடிய வேண்டுகோள்கள் எந்தப் பயனையும் அளிக்கப்போவதில்லை என்றும் இந்தியாவின் பிரதான தேசிய ஆங்கில பத்திரிகைகள் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றன.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து த இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் ஹெரால்ட் ஆகிய பத்திரிகைகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆசிரியர் தலையங்கங்களை தீட்டியிருக்கின்றன.

த இந்து

சென்னையிலிருந்து வெளியாகும் த இந்து ஆங்கில பத்திரிகை ‘தவறுகளை திருத்தல்; தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யுமாறு இலங்கைக்கு இந்தியாவின் வேண்டுகோள் குறித்து’ (Making amends: On India’s appeal to Srilanka to address Tamil aspirations) என்ற தலைப்பில் தீட்டியிருக்கும் ஆசிரிய தலையங்கத்தில் கூறியிருப்பதாவது;

தமிழ் சிறுபான்மை இனத்தவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு இந்தியா விடுத்த வேண்டுகோள் பாக்கு நீரிணையின் இரு தரப்பிலும் தமிழ்ப் பேசும் மக்களின் வரவேற்பை நிச்சயமாக பெறும். ஆனால் ஏதாவது பயன் ஏற்படுமா என்பது சந்தேகமே.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் செப்டெம்பர் 26 நடைபெற்ற இணையவழி உச்சி மாநாட்டுக்கு பிறகு இரு நாடுகளினாலும் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையொன்றில் ஐக்கியப்பட்ட இலங்கை ஒன்றுக்குள் தமிழர்களுக்கான சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் நாட்டம் கொண்டுள்ள இந்தியாவின் கொள்கை மீண்டும் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது மாத்திரமல்ல, இலங்கையின் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதனூடாக நல்லிணக்க செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை குறித்தும் வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தது.

தமிழர்கள் உட்பட சகல இனக்குழுக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதை நோக்கி இலங்கை செயற்படும் என்று ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டதாகவும் அந்த கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த கடப்பாட்டை இலங்கை மக்களினால் வழங்கப்பட்ட ஆணையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட வேண்டிய நல்லிணக்கத்துடன் இணைத்ததன் மூலம் அவர் மழுப்பி உரைத்திருக்கிறார் போல் தெரிகிறது.

ராஜபக்சவின் அலுவலகத்தினால் உச்சிமாநாடு குறித்து வெளியிடப்பட்ட தனியான அறிக்கை ஒன்றில் 1987 இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்கும் 13ஆவது திருத்தம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு குறிப்பிடப்படாமல் இருந்தது அது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதுமல்ல.

ராஜபக்சவை பொறுத்தவரை அவரது கட்சி விரும்புகின்ற வழியில் அரசியலமைப்பை திருத்துவதற்கு பாராளுமன்றத்தில் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவரிடம் இருக்கிறது. ஆனால், தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் வகைக்கும் அவரது சகோதரர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னுரிமை கொடுக்க விரும்புகின்ற விடயத்துக்கும் இடையே பாரிய இடைவெளி இருக்கிறது. இது விடயத்தில் இந்தியாவின் அக்கறை 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் விடுவதற்கு அப்பால் மாகாண சபைகள் முறையையே ஒழித்துவிடுமாறு விடுக்கப்படுகின்ற கோரிக்கைகளை இலங்கை பொருட்படுத்தக்கூடும் என்ற ஊகங்களுடன் தொடர்புடையது என்பதில் சந்தேகமில்லை. 

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் போக்குகளை பொறுத்தவரை சீனாவின் செல்வாக்கும் பிராந்தியத்துக்குள் இலங்கை செல்வதை மட்டுப்படுத்துவதில் அக்கறை கொண்டிருக்கும் இந்தியாவினால் இந்த சிறிய அயல்நாட்டின் மீது பெருமளவு செல்வாக்கை பிரயோகிப்பது சிக்கலானதாக இருக்கக்கூடும். 2005-2006 காலகட்டத்தில் உள்நாட்டுப்போர் மீண்டும் மூண்டவேளை இலங்கையை இந்தியா ஆதரித்தபோது ஒன்றிணைந்ததாக இருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதை அது பொருட்படுத்தவில்லை.

இப்போது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், போர்க்கால அத்துமீறல்களுக்கான நீதி ஆகியவை தொடர்பில் இலங்கையினால் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு பொறுப்பு கூருமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதில் உலக நாடுகளுக்கு பெரிதாக அக்கறை இல்லாத நிலையில் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறு இலங்கைக்கு விடுக்கப்படக்கூடிய எந்தவொரு வேண்டுகோளும் எந்தளவுக்கு பயன்தரும் என்பது பற்றி கணிசமான சந்தேகம் இருக்கிறது.

தங்களுக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையை ராஜபக்சாக்கள் நன்கு அறிவார்கள். அதனால் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அங்கீகாரத்தை பெறாத எதையும் அவர்கள் செய்யக்கூடிய சாத்தியம் இல்லை. இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைகளை அறிவித்து பௌத்த கலாசார பரிமாற்றங்களுக்கான 15மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவியையும் இந்தியா வழங்க முன்வந்திருக்கும் அதேவேளை, கடனை திருப்பி செலுத்துவதற்கான தவணையை நீடிக்குமாறும் நாணய பரிமாற்றத்துக்காகவும் இலங்கையினால் விடுக்கப்பட்டிருக்கும் வேண்டுகோள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதை இந்தியா பின்போட்டிருக்கிறது. ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தியிருக்கின்ற சட்டத்தை  இல்லாமல் செய்வதற்கு ராஜபக்ச அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்ற நிலையில் சட்டவாக்க விவகாரத்தில் எதிர்கால நிகழ்வு போக்குகளை இந்தியா உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ‘உதட்டளவிலான சேவை மாத்திரமே’ (Only Lip Service aspirations) என்ற தலைப்பில் எழுதியிருக்கும் ஆசிரியர் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது,

கடந்த மாதத்தைய பாராளுமன்றத் தேர்தலில் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ச பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு அவருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது இணையவழி சந்திப்பு இருதரப்பு உறவுகளில் தடங்கல்களை ஏற்படுத்தியிருக்கின்ற முக்கியமான ஒரு பிரச்சினை தொடர்பில் இரு அயல்நாடுகளுக்குமிடையே இருக்கக்கூடிய கடுமையான வேறுபாடுகளை தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது. இந்த நிலைவரத்தை மாற்றுவதற்கு இந்தியாவினால் பெரிதாக எதையும் செய்ய முடியாது என்பதையும் அது வெளிக்காட்டியிருக்கிறது.

தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அரசியல் அதிகாரத்தை பரவலாக்குவதற்கு இலங்கை அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தை இலங்கை நடைமுறைபடுத்த வேண்டும் என்று 1988 முதலே இந்தியா கேட்டுவருகிறது. 1987 ஜூலை இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின் விளைவாக வந்த அந்த திருத்தம் தமிழ் சிறுபான்மையினத்தவர்களுக்கு ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் சிறியளவு சுயாட்சியை வழங்குகின்ற ஒரேயொரு அரசியலமைப்பு ஏற்பாடாக தொடர்ந்தும் இருக்கிறது.

ஆனால், அதிகாரங்கள் பரவலாக்கப்பட்ட மாகாண சபைகள் இலங்கை பூராகவும் அமைக்கப்பட்டபோது அசமத்துவமான அதிகாரப் பரவலாக்கலுக்கான கோரிக்கை முதலில் கிளம்பிய சிறுபான்மையினத்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலும் கிழக்கிலும் இருந்து (முன்னதாக அவை இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம்) சில வருடங்களாக அந்த மாகாண சபைகள் தெரிவு செய்யப்படவில்லை. பிறகு அவற்றுக்கு தேர்தல் நடத்தப்பட்ட வேளையிலும்கூட அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாகவே இருந்தன. இப்போது 13ஆவது திருத்தத்தையும் இல்லாமல் செய்வது குறித்து கொழும்பில் பேசப்படுகிறது.

இரு பிரதமர்களுக்குமிடையிலான சந்திப்பு எதிர்பார்க்கப்பட்டதை போலவே முடிந்திருக்கிறது. இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதைப் போன்று ஐக்கியப்பட்ட இலங்கை ஒன்றுக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவத்துக்கான தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததுடன் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நல்லிணக்க செயன்முறைகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தினார். ராஜபக்சவோ தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தாத முறையில் ‘இலங்கை மக்களினால் வழங்கப்பட்ட ஆணையின் பிரகாரமும் அரசியலமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும் நல்லிணக்க செயன்முறைகளை முன்னெடுப்பதன் மூலமாகவும் தமிழர்கள் உட்பட சகல இனக்குழுக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது குறித்து நம்பிக்கை வெளியிட்டார்’.

இலங்கை பிரதமர் தமிழர் பிரச்சினை குறித்து எதுவுமே குறிப்பிடாத தனியான அறிக்கையொன்றையும் வெளியிட்டார். இன்னமும் தீர்வு காணப்படாமல் இருக்கும் இலங்கையின் தமிழர் பிரச்சினை தொடர்பில் உதட்டளவிலான சேவையை மாத்திரமே செய்ய வேண்டும் என்பதை இரு தரப்பினரும் இப்போது தெரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அதேவேளை இந்த சொல்விளையாட்;டு எந்த முன்னேற்றத்தையும் தராது என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெய்ஜிங்குடனான தனது நெருக்கம் டெல்லியை சினமூட்டுகிறது என்பதும் கொழும்புக்கு தெரியும்.

2017 ஜூலையில் இணங்கிக்கொள்ளப்பட்ட எந்தவொரு இலங்கை உட்கட்டமைப்பு செயல் திட்டத்தையும் மோடி அரசாங்கத்தினால் முன்னோக்கி நகர்த்த முடியாமல் இருந்து வந்திருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் சரி இந்த செயற்திட்டங்களை பொறுத்தவரையிலும் சரி இலங்கையில் களத்தின் நிலைவரம் மாறும் என்பதற்கான எந்தவிதமான உத்தரவாதத்தையும் கூட்டு அறிக்கையில் காணமுடியவில்லை. இராணுவவாத சிங்கள தேசியவாத மொழியில் பேசுகின்ற ராஜபக்சாக்கள் எம்மால் பார்க்கக்கூடிய எதிர்காலத்துக்கு பதவியிலிருக்கப் போகிறார்கள். இரு நாடுகளுக்குமிடையே பலமான கலாசார பிணைப்புகள் இருந்தாலும் கூட இலங்கையுடனான உறவு முறையில் உள்ள சவால்கள் டெல்லியின் அயலகம் முதலில் என்ற கொள்கைக்கு ஒரு பரீட்சையாகும்.

டெக்கான் ஹெரால்ட்

டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையில் ‘இந்திய-இலங்கை உறவுகளில் மீட்டெடுக்க வேண்டிய பெருமளவு வாய்ப்புகள்’ (Much ground to recover in India-Srilanka ties) என்ற தலைப்பில் ஆசிரியர்  தலையங்கத்தில் கூறியிருப்பதாவது,

பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை பிரதமர்  மகிந்த ராஜபக்சவும் சனிக்கிழமை தங்களுக்கிடையிலான முதலாவது இணையவழி சந்திப்பில் இருதரப்பு கடன்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகள் பற்றி பேசினார்கள். இந்தியாவிடம் இலங்கை பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கான தவணையை நீடிக்க வேண்டும் என்ற கொழும்பின் வேண்டுகோளும் நிகழ்ச்சி நிரலில் இருந்தது.

இந்தியாவிடம் இலங்கை 96 கோடி டொலர்கள் கடனை பெற்றிருக்கிறது. இலங்கைக்கான 40 கோடி டொலர்கள் நாணயமாற்ற ஏற்பாட்டுக்கும் ஏற்கனவே இந்தியா இணங்கியிருந்தது. இலங்கை இப்போது இன்னொரு 100 கோடி மேலதிக நாணய பரிமாற்ற ஏற்பாட்டுக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறது. இலங்கையில் இந்தியாவின் பல உட்கட்டமைப்பு செயற்திட்டங்களின் அந்தஸ்து குறித்தும் இருதரப்பினரும் ஆராய்ந்தார்கள். அவற்றில் முதன்மையானது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டமாகும். இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்தியாவும் ஜப்பானும் எதிர்பார்த்தன. ஆகஸ்டில் பொதுத்தேர்தலுக்கு முன்னதான நாட்களில் ராஜபக்ச இந்தத் திட்டத்தை இடைநிறுத்தி வைத்திருந்தார். அந்த முக்கியமான திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் கொழும்பு வெளியிடவில்லை.

சனிக்கிழமை நடைபெற்றது ஒரு இருதரப்பு உச்சிமகாநாடாகும். இருந்தாலும் மூன்றாவது நகரமான சீனாவும் இதில் மறைமுகமாக சம்பந்தப்பட்டிருக்கிறது. மாநாட்டின் உள்ளடக்கத்தையும் விளைவுகளையும் சீனாவே தீர்மானித்தது. கடந்த தசாப்பத்தில் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு பலமடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. ஜனாதிபதியாக தனது முன்னைய பத்து வருட ஆட்சிக்காலத்தின்போது சீனாவின் செல்வாக்கு வலயத்துக்குள் இலங்கையை கொண்டு சென்ற மகிந்த ராஜபக்சவுடனான இந்தியாவின் ஊடாட்டம் இலங்கையை இந்தியாவின் வலயத்துக்குள் மீண்டும் கொண்டுவருவதை நோக்கமாக கொண்டதாகும். உதாரணமாக நாணய பரிமாற்றம் மற்றும் இலங்கையின் கடன்சுமையை தளர்த்துதல் ஆகிய விடயங்களில் இந்தியாவின் சமிக்ஞை சீனாவின் மீது இலங்கை தங்கியிருப்பதை குறைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கையும் இந்து சமுத்திரத்தில் அதன் பிரசன்னத்தையும் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் பரிமாற்றம் மற்றும் பயிற்சி உட்பட இலங்கையுடன் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு இந்தியா இணங்கிக் கொண்டிருக்கிறது. பௌத்த மதம் தொடர்பாக இலங்கையுடன் இருக்கும் பிணைப்பின் மூலமாக மென்வலு (Soft Power) செயற்பாட்டையும் இந்தியா தீவிரப்படுத்தியிருக்கிறது. புத்த மதம் தொடர்பிலான உறவுகளை பொறுத்தவரை கொழும்புக்கு பெய்ஜிங்குடனும் அதேபோன்று பிணைப்புகள் இருக்கின்றன. பௌத்தமதம் சார் உறவுகளை மேம்படுத்துவதற்காக ஒரு கோடியே 50இலட்சம் மானிய உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக இந்தியா அறிவித்திருக்கிறது. இலங்கையில் சீனாவின் செல்வாக்கின் பின்புலத்தில் மோடி-ராஜபக்ச சந்திப்பு இந்த உறவுகளில் இந்தியா இழந்துபோனவற்றில் எவ்வளவு வாய்ப்புகளை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை கணிசமான இடைவெளி நிலவுகிறது. அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு ராஜபக்ச அரசாங்கம் பரிசீலனை செய்துகொண்டிருக்கும் அதேவேளை, அந்த திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இந்த வேறுபாட்டை மோடி-ராஜபக்ச சந்திப்பின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தியாவினதும் இலங்கையினதும் நிலைப்பாடுகளை அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. அதேவேளை முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெனில், ராஜபக்ச அரசாங்கத்தினால் கொழும்பில் வெளியிடப்பட்ட தனியான அறிக்கையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைபடுத்துவதனூடாக நல்லிணக்கத்தை காணுமாறும் நீதிக்கான தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறும் மோடியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இது இலங்கையின் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு நல்லதேயல்ல.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48