(செ.தேன்மொழி)
ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மென்டி ரக போதைப் பொருளை கடத்திய கலால் திணைக்கள அதிகாரியை பணிநீக்கம் செய்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொஸ்கம - கலுஹக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட கலால் திணைக்கள அதிகாரி மற்றும் அவருடன் காரில் சென்றுக் கொண்டிருந்த மற்றைய நபரிடமிருந்து 653 கிராம் 380 மில்லி கிராம் மென்டி ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர்களுக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக கூறப்படும் மேலும் ஒரு நபர் ஹங்வெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கலால் திணைக்கள அதிகாரி போதைப் பொருள் கடத்தலுக்காக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கலால்பிரிவுக்கு இணங்க சேவையாற்றி வந்த கலால் திணைக்கள அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்திய கலால் திணைக்கள ஆணையாளர் , கைது செய்யப்பட்ட அதிகாரியை உடன் பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாக கலால் திணைக்கள ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.