அண்டை நாடான போட்ஸ்வானாவில் நூற்றுக் கணக்கான யானைகளின் உயிரிழப்புக்கு காரணமான நச்சு நுண்ணுயிரிகளை பரிசோதனை செய்ய இறந்த யானைகளின் மூளையின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு சிம்பாப்வே திட்டமிட்டுள்ளது.

சிம்பாப்வேயின் மேற்குப் பகுதியில் ஆகஸ்ட் 24 முதல் இதுவரை 34 யானைகள் உயிரிழந்துள்ளதாக பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு மேலாண்மை ஆணையகத்தின் பணிப்பாளர் ஜெனரல் ஃபுல்டன் மங்வான்யா திங்களன்று ஒரு அறிக்கையில் பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்த ஆண்டு 330 க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள போட்ஸ்வானா, சயனோ எனப்படும் பக்டீரியாக்கள் உற்பத்தி செய்த நச்சுப்பொருள் கலந்த தண்ணீரைப் பருகியதால்தான் யானைகள் உயிரிழந்தது எனத் தெரிவித்தது.

இதேவேளை சில நேரங்களில் நீல-பச்சை ஆல்கா என அழைக்கப்படும், சயனோ பாக்டீரியா என்பது நீரில் பொதுவான நுண்ணிய உயிரினங்கள் மற்றும் விலங்குகள் மற்றும் மனிதர்களின் கல்லீரல் அல்லது நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் நச்சுக்களை உருவாக்கலாம்.

காலநிலை மாற்றம் உலகளாவிய வெப்பநிலையை அதிகரிப்பதால் இவ்வாறான நச்சு தாக்கங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந் நிலையில் டி.என்.ஏ பகுப்பாய்விற்காக இறந்த யானைகளின் மூளைப் பாகங்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு சிம்பாப்வே திட்டமிட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் மொத்த யானைகள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு சிம்பாப்வேயில் உள்ளது. அங்கு மொத்தமாக சுமார்  80,000 யானைகள் உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

எனினும் அண்மைய ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கையானது வறட்சி மற்றும் சட்டவிரோத வேட்டை என்பவை காரணமாக வெகுவாக குறைந்து விட்டதாகவும் சிம்பாப்வே சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம் கடந்த 2019 ஆம் ஆண்டில் குறைந்தது 200 யானைகள் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக குறித்த பகுதியில் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.