(நா.தனுஜா)

தேங்காயின் பருமனுக்கு அமைவாக அதற்கான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

எனினும் இந்த விடயத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு நுகர்வோர் அதிகாரசபையே பதிலளிக்க வேண்டும் என்றும் தம்மால் எதனையும் கூறமுடியாது என்றும் அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது தேங்காயின் பருமனுக்கு அமைவாக அவற்றின் விலைகளை நிர்ணயிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இதில் இலங்கையில் பயன்படுத்தப்படும், ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவீடுகளான மீற்றர், சென்ரிமீற்றர் என்பன பயன்படுத்தப்படவில்லை. எனவே இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ய முடியுமா என்று ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர், 'தேங்காயின் விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் அதிகாரசபையினாலேயே வெளியிடப்பட்டிருக்கிறது.

நாம் இங்கு அமைச்சரவையின் முடிவுகளை அறிவிப்பதற்காகவே வந்திருக்கின்றோம். எனவே இதுபற்றி நுகர்வோர் அதிகாரசபையிடம் தான் கேள்வி எழுப்பவேண்டும். எனினும் இதுகுறித்து அவர்களுக்கு நாம் அறிவிக்கின்றோம்' என்று பதிலளித்தார்.

எனினும் நாட்டுமக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற ஓர் நுகர்வுப்பொருளான தேங்காயின் விலையில் ஏற்படுத்தப்படும் மாற்றம் தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லையா என்று மீண்டும் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதுகுறித்து ஆராயப்பட்டதென்று பதிலளித்தார்.

இந்த நடவடிக்கைகயினால் சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படும்பட்சத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி தேங்காயின் பருமனுக்கு அமைவாக அவற்றுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுகுறித்து உங்களைப்போன்றே எங்களுக்கும் பிரச்சினைகள் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

எனினம் இதுகுறித்து நுகர்வோர் அதிகாரசபை மற்றும் அதற்குரிய அமைச்சு ஆகியவற்றிடமே கேள்விகளை எழுப்பவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.