2016 ஆம் ஆண்டில் ராஜகிரியவில் ஏற்பட்ட விபத்து தொடர்பான வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்கவின் சாரதியான திலும் துஷித குமாரவை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணையில் இரண்டாம் குற்றவாளியாக குற்றச்சாட்டப்பட்டே அவரை கைதுசெய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஜகிரிய பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானதில், சந்தீப் சம்பத் எனும் இளைஞர் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில்,  சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் இரு குற்றப் பத்திரிகைகள் ஊடாக இரு வேறு வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.

ஒரு வழக்கில் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மட்டும் பெயரிடப்பட்டுள்ளதாகவும் மற்றைய வழக்கில் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி  வெலிக்கடை பொலிஸ் பிரிவில் டப்ளியூ.பி.கே.பி. 4575 எனும் ஜீப் வண்டியின் சாரதியாக செயற்பட்டு அபாயகரமாக வாகனம் செலுத்தி ஒருவரை படுகாயத்துக்குட்படுத்தியமை தொடர்பில் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரம் முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனைவிட இரண்டாவது குற்றப்பத்திரிகையானது, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அந்த விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட தற்போது பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் சுதத் அஸ்மடல, சம்பிக்கவின் சாரதியாக  செயற்பட்ட  திலும் துஷித குமார ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

16 குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில்,  சாட்சிகளை உருவாக்கியமை,  சாட்சிகளை அழித்தமை,  வாகன விபத்தை ஏற்படுத்திய சம்பிக்க ரணவக்க என்பவருக்கு சட்ட ரீதியிலான தண்டனையில் இருந்து தப்பிக்க  நீதிவான் நீதிமன்றுக்கு பொய்யான அறிக்கையை சமர்ப்பித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள்  அதில் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.