அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ ஒரேகான் மற்றும் வொஷிங்டன் உள்ளிட்ட மாகாணங்களில் பற்றி எரிந்து வருகிறது. 

இந்நிலையில் வடக்குப் பகுதியில் உள்ள நாபா பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முதல் திடீரென புதிதாக காட்டு நெருப்பு உண்டானது.

முதலில் 11 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பற்றி எரிந்த நெருப்பு அடுத்த சில மணி நேரங்களில் 4 மடங்காக கொளுந்து விட்டு எரிகிறது.

கிளாஸ் பயர் (GlassFire) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நெருப்பு மேலும் தீவிரமாகப் பரவும் அபாயம் இருப்பதால் அதனை அணைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பெரு நெருப்பு காரணமாக நாபா பள்ளத்தாக்கு, கலிஸ்டோகா பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

நாபா பள்ளத்தாக்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 2,000 ஏக்கர்களை சில மணி நேரத்தில் எரித்து நாசமாக்கியுள்ளது.

தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் குறைந்தது 21 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக அப்பகுதியில் உள்ள உள்ளூர் வைத்தியசாலைகள் தெரிவித்துள்ளன. இப்பகுதிக்கு சிவப்புக் கொடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாஸ்தா கவுண்டியில் வேகமாக பரவும் காட்டுத் தீவிபத்தின் விளைவாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், இது விரைவாக 15,000 ஏக்கரை அழித்துள்ளது.

கலிபோர்னியாவில் நடப்பாண்டு ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 37 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசமாகியுள்ளது. 

இதுவரை ஏற்பட்ட காட்டுத்தீயில் இது புதிய வரலாற்றுப் பேரழிவு என வர்ணிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் இந்த ஆண்டு 8,000 காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

முன்னெச்சரிக்கையாக 65,000 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. 7,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளது.