நாட்டின் பல பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயினுடன் இரு பெண்கள் உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துருகிரிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஜயகத் மாவத்தைக்கு  திரும்பும் சந்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 10 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளைத் தொடர்ந்து அத்துருகிரிய - அரங்கல பகுதியில் 500 கிராம் ஹெரோயினுடன் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோகந்தரை மற்றும் புறக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 32 மற்றும் 47 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரம்பத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது 2 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 27 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் வெல்லம்பிட்டிய - சாலமுல்ல பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 5 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயினுடன் கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊருகஸ்மங்சந்தி - ஹம்பருகல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில்  4 கிராம் 570 மில்லிகிராம் ஹெரோயினுடன் அதே பகுதியைச் சேர்ந்த  46  வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொரளை - பையாபில்ட் பூங்கா வீதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கைகளில் 11 கிராம் 342 மில்லிகிராம் ஹெரோயினுடன் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 48 வயதான சந்தேக நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினர் கல்கிஸ்ஸ - பீரிஸ் வீதியருகில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது  செய்யப்பட்டுள்ளனர். பெண்ணிடமிருந்து 4 கிராம் 340 மில்லிகிராம் ஹெரோயினும் மற்றைய சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 230 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.  

இவ்வாறு இரத்மலானை மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 42 வயது மதிக்கத்தக்க நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.