பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரீசிலனை இன்று இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபு முதல் வாசிப்புக்காக கடந்த 22 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் நேற்று வரை மொத்தமாக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந் நிலையில் அம் மனு மீதான பரீசிலனையான இன்றைய தினம் ஐந்து நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமில் பரீசிலனைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய மற்றும் நீதிபதிகளான புவனேகா அலுவிஹரே, சிசிரா டி அப்ரூ, பிரியந்த ஜெயவர்தன மற்றும் விஜித் மலல்கோட ஆகிய ஐந்து உயர் நீதிமன்ற நீதியர்கள் முன்னிலையில் இடம்பெறவுள்ளது. 

மனுதாரர்கள் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்தின் பல பிரிவுகளின் அரசியலமைப்பை சவாலுக்கு உட்படுத்துவதாகவும், மேலும் 20 ஆவது திருத்த வரைவினை மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.