மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆரோன் பின்ஞ்ச் மற்றும் தேவ்தூத் படிக்கல் மற்றும் டிவில்லியர்ஸின் ஆகியோரின் அரைசதங்களுடன் பெங்களூரு அணி 201 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 10 ஆவது போட்டி விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ரோஹித் சர்மான தல‍ைமையிலான மும்மை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே இன்று துபாயில் ஆரம்பமானது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஆரோன் பின்ஞ்ச் மற்றும் தேவ்தூத் படிக்கல் ஆகியோர் நல்லதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுக்க பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 5 ஓவர்கள் நிறைவில் 49 ஓட்டங்களையும் 8 ஓவர்களில் நிறைவில் 74 ஓட்டங்களையும் விக்கெட் இழப்பின்றி பெற்றது.

அதன் பின்னர் 9 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் அதிரடி காட்டிய பின்ஞ் 35 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களுடன் டிரெண்ட் போல்டின் பந்து வீச்சில் பொல்லார்ட்டிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

அவரையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் விராட் கோலியும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இதனால் பெங்களூரு அணி 12.2 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 92 ஓட்டங்களை குவித்தது.

தொடர்ந்து 3 ஆவது விக்கெட்டுக்காக படிக்கல் மற்றும் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்து மும்பையின் பந்துகளை பதம் பார்த்தனர். அதனால் பெங்களூரு அணி 15 ஓவர்களில் நிறைவில் 123 ஓட்டங்களை குவித்தது. 

இந் நிலையில் படிக்கல் 17.1 ஆவது ஓவரில் 40 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 54 ஓட்டங்களுடன் போல்டின் பந்து வீச்சில் பொல்லார்ட்டிடம் பிடிகொடுத்து வெளியேறினார் (149-3).

4 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சிவம் டூப்புடன் கைகோர்த்த டிவில்லியர்ஸ் 19 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் பிரமாண்டமான சிக்ஸருடன் 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக அரைசதம் கடந்தார்.

இறுதி ஓவரை எதிர்கொண்ட சிவம் டூப் மொத்தமாக மூன்று சிக்ஸர்களை விளாசித் தள்ள, பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் சிவம் டூப் 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி அடங்கலாக 27 ஓட்டங்களுடனும், வில்லியர்ஸ் 55 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

Photo Credit : ‍ IPL