13 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறும் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்மை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மா களததடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

விளையாடிய முதல் போட்டியில் அசத்தல் வெற்றி, இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வி என ஏற்றமும் இறக்கமுமாக உள்ளது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது. 

துடுப்பாட்டத்தில் டிவில்லியர்ஸ் மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் தற்போது உள்ளார். விராட் கோலி, மூத்த வீரர் பின்ச் , சகலதுறை ஆட்டக்காரரான ஷிவம் தூபே ஆகியோர் ஓட்டங்களை குவிப்பதில் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர்.

விக்கெட் காப்பாளர் பிலிஃப் தடுமாறி வருவதால் இன்றைய போட்டியில் பார்த்திவ் படேல் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்து வீச்சில் சாஹல், சைனி, வோஷிங்டன் சுந்தர் மட்டுமே நல்ல சராசரியுடன் பந்து வீசி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், ஸ்டெய்ன் ஆகியோர் ஓட்டங்களை வாரி வழங்கி வருவது அணிக்கு பெரும் பலவீனமாக உள்ளது. 

அதேநேரம் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் இசுறு உதானவும் இன்றைய போட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க மும்பை அணியில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி ஆகியோர் சிறந்த நிலையில் உள்ளனர். 

அதிரடி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு இருவரும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகின்றனர். 

பந்து வீச்சில் பும்ரா, பேட்டின்சன், போல்ட் ஆகிய மூவரும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக விளங்கி வருகின்றனர். 

ராகுல் சாஹர் , குருனால் பாண்டியா இருவரும் சுழற்பந்து வீச்சின் மூலம் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.

ஐ.பி.எல். அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 16 ஆட்டங்களிலும், பெங்களூர் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.