(நா.தனுஜா)
இலங்கைக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட 21 கழிவுப்பொருட்கள் அடங்கிய  கொள்கலன்களை மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டமையைப் பாராட்டியிருக்கும் நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம், அமெரிக்காவும் ஐரோப்பாவும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கழிவுப்பொருட்களை அனுப்புவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

கழிவுப்பொருட்கள் நிரப்பப்பட்ட 21 கொள்கலன்கள் இலங்கையினால் மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கே திருப்பியனுப்பப்பட்டிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திலிருந்து 263 கழிவுப்பொருள் கொள்கலன்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 21 கொள்கலன்களே இவ்வாறு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக சுங்கத்திணைக்களம் அறிவித்திருக்கிறது.

எஞ்சிய 242 கொள்கலன்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் சுங்கத்திணைக்களம் தெரிவித்திருக்கிறது. அவற்றில் 112 கொள்கலன்கள் கொழும்புத்துறைமுகத்திலும் 130 கொள்கலன்கள் கட்டுநாயக்கவிலும் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கழிப்பொருள் கொள்கலன்கள் இலங்கையிலிருந்து மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் சர்வதேச ஆங்கில ஊடகமொன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

இலங்கைக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட கொள்கலன்களில் அபாயகரமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவை மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவும் ஐரோப்பாவும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு கழிவுப்பொருட்களை  அனுப்பிவைப்பதை  உடனடியாக நிறுத்தவேண்டிய தருணம் இதுவாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.