சர்ச்சைக்குரிய நாகோர்னோ - கராபெக் பிராந்தியத்தில் ஆசிய நாடுகளான ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையே திங்களன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக பலர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர். 

இரு தரப்பிலிருந்தும் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

இது அசர்பைஜானின் ஒரு பகுதியாக சட்டப்பூர்வமாக கருதப்படுகிறது, ஆனால் இது 1991 இல் சுதந்திரம் அறிவித்ததிலிருந்து ஆர்மீனிய இனத்தினரால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் சண்டையிட்டதாக அறிவித்தது. அதே நேரத்தில் அசர்பைஜானின் பாதுகாப்பு அமைச்சகம் ஆர்மீனிய படைகள் டெர்ட்டர் நகரத்தில் ஷெல் தாக்குதல் மேற்கெண்டதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை ஞாயிற்றுக்கிழமை மோதல்கள் வெடித்ததைத் தொடர்ந்து அசர்பைஜானுக்கும் ஆர்மீனிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டையை நிறுத்துமாறு உலகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.