கொழும்பு மற்றும் காலி பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மீகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அத்துருகிரிய - ஜயந்தி வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் ஹெரோயினுடன் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் பேலியகொடை - கலுபாலத்திற்கு அருகில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொஹிலவத்த - அங்கொட பகுதியைச் சேர்ந்த 31 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி - கந்தேவத்த பகுதியில்  மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைககளில்  ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் 210 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது. அதே பகுதியில் வசிக்கும் 46 வயதான பெண்ணே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து தெமட்டகொட - மிஹிதுசென்புர பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் பணத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 730 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 42,000 ரூபா பணம் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 தெமட்டகொட - பேஸ்லைன் வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரும், பொரளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.