வடக்கு – கிழக்கில் இன்று திங்கட்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழரின் நினைவேந்தல் உரிமை மற்றும் அடக்குமுறைகளை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும், இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, புளொட், ரெலோ, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ. பி.ஆர். எல். எவ், தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசிய பசுமை இயங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்தே இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்தக் கட்சிகளின் அழைப்புக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கலைப்பீட மாணவர் ஒன்றியம், வடக்கு, கிழக்கு வணிகர் கழகங்கள், போக்குவரத்துச் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன.

இதேவேளை, இன்றையதினத்தில் ஒரு வெற்றிகரமான ஹர்த்தாலை அனுஷ்டித்து தமிழ் மக்கள் தமது கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்ட வேண்டும் என்றும் இதற்காக இன்றையதினம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இன்றையதினம் இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குழப்ப நினைக்கும் அரசின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அரசு தரப்பிலோ, பாதுகாப்பு தரப்பிலோ அல்லது அரசின் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களிடத்தில் இருந்தும் இந்த ஒற்றுமையை இந்த அரசியல் உரிமையை, ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற ஒன்றுபட்டு நிற்கின்ற இந்த  நிகழ்ச்சியை சீர்குலைப்பதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.

மக்கள் அதனை செய்பவர்களிற்கு இடமளிக்கக் கூடாது. அப்படி குழப்ப நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது.  இந்த பத்து கட்சிகள், பல துறையைச் சார்ந்த தொழில் துறையைச் சார்ந்தவர்கள், போக்குவரத்து துறையை சேர்ந்தவர்கள், தனியார் துறையை சேர்ந்தவர்கள், இந்த ஹர்த்தால் பொது வேலைநிறுத்தத்தை பூரணமாக அர்ப்பணிப்போடு பொது வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என மாவை தெரிவித்துள்ளார்.