( எம்.எப்.எம்.பஸீர்)

சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் , சமூக கொள்ளை விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை நாட்டுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, அவர்  தற்போது உள்ள நாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக் குழு,  குற்றப்புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை, ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையில் குறித்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் இடம்பெற்ற போதே, ஆணைக்குழுவின் தலைவரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை , சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலைசெய்ய முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப்  பிரிவின் முன்னாள் பிரதானியும் முன்னாள் இராணுவ படைப் பிரிவுகளின் பிரதானியுமான முன்னாள் பதில் இராணுவ தளபதி அமல் கருணாசேகர , தான் உள்ளிட்ட இராணுவ புலனயவுப் பிரிவினர் அந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டமையானது அரசியல் தேவைக்காக இடம்பெற்றது என குறித்த ஆணைக் குழுவில் முறையிட்டுள்ளார்.

 அந்த முறைப்பாடு தொடர்பில் நேற்று முன் தினம் பரிசீலனைகள் இடம்பெற்ற நிலையிலேயே, அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினரால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 குறித்த முறைப்பாடு மீதான விசாரணைகளின் போது, இராணுவ புலனாய்வுப்  பிரிவின் முன்னாள் பிரதானியும் முன்னாள் இராணுவ படைப் பிரிவுகளின் பிரதானியுமான முன்னாள் பதில் இராணுவ தளபதி அமல் கருணாசேகரவின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் இறுதியில்  அந்த முறைப்பாட்டுக்கான பிரதிவாதிகள் யார் என  ஜனாதிபதி ஆணைக் குழு வினவியது.

 அதற்கு பதிலளித்த இராணுவப் புலனாய்வுப்  பிரிவின் முன்னாள் பிரதானியும் முன்னாள் இராணுவ படைப் பிரிவுகளின் பிரதானியுமான முன்னாள் பதில் இராணுவ தளபதி அமல் கருணாசேகர, பிரதிவாதிகளாக  சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, ருவன் பெத்தியகொட ஆகியோரையும் மேலதிக பிரதிவாதிகளாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஆகியோரை பெயரிட்டார்.

 இந் நிலையிலேயே பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பப்படும் போதே, நிசாந்த சில்வா தொடர்பில் விஷேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

'நிசாந்த சில்வா, வெளிநாடொன்றில் உள்ளதாக , இந்த ஆணைக் குழு ஏற்கனவே அவருக்கு அனுப்பிய பல அறிவித்தல்கள் ஊடாக தெரியவந்துள்ளது.  நிசாந்த சில்வா, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் ஒரு பிரதிவாதி. 

எனவே, அவருக்கு வேறு ஒரு நாட்டில் அரசியல் தஞ்சம் பெற ஐக்கிய நாடுகளின் பிரகடங்களின் பிரகாரம் வாய்ப்பில்லை.  எனவே நிசாந்த சில்வாவை நாட்டுக்கு அழைத்து வரும் முகமாக, அவர் தற்போது வசிக்கும் நாடு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சி.ஐ.டி.யின் பணிப்பாளருக்கு உத்தரவிடுகின்றேன்.' என ஆணைக் குழுவின் தலைவர் உபாலி அபேரத்ன அறிவித்தார்.

 

 கீத் நொயார் விவகாரத்தில் திரிபோலி இராணுவ முகாமில் சேவையாற்றிய இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஆர்.டி.எம்.டப்ளியூ.புளத்வத்த, எஸ்.ஏ.ஹேமசந்திர, யூ.பிரபாத் வீரகோன், பி.எல்.ஏ.லசந்த விமலவீர, எச்.எம். நிசாந்த ஜயதிலக, எம்.ஆர். நிசாந்த குமார , சி. ஜயசூரிய ஆகிய  புலனாய்வுப் பிரிவினரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் சார்பிலும் முறைப்பாடுகள் அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.