13 ஆவது ஐ.பி.எல். தொடரின் ஒன்பதாவது போட்டி ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியானது சார்ஜாவில் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ய பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கவுள்ளது.

ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியானது சந்தித்துள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியையும் ஒன்றில் தோல்வியைத் தழுவியும் பட்டியலில் 2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ராகுல் பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 ஓவர்களில் 132 ஓட்டங்களை குவித்து, எதிரணி வீரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த தொடரில் சதம் விளாசியுள்ள ஒரே வீரராகவும் ராகுல் தற்போது வரை உள்ளார்.

மேலும் மெக்ஸ்வெல், மயங் அகர்வால் நிகோலஷ் பூரண் போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களும் மொஹம் சமி, காட்ரெல், ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் அந்த அணியில் உள்ளனர்.

ராஜஸ்தான் அணி இதுவரை ஒரேயொரு போட்டியை சந்தித்து அதிலும் வெற்றி பெற்றுள்ளது. பட்டியலில் 2 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியிலும் அதிரடியான வீரர்கள் குவிந்துள்ளனர்.

குறிப்பாக பஞ்சாப் அணியில் ராகுல் எப்படி அதிரடி வீரராக இருக்கிறாரோ அதேபோல ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆட கூடியவர். அவர் சென்னை அணிக்கு எதிராக 32 பந்தில் 70 ஓட்டங்களுக்கு மேல் விளாசினார். 

அதுமாத்திரமன்றி அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் மில்லர், ‍ஜேப்ரா ஆர்ச்சர், ராகுல் திவேதியா போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். 

இங்கிலாந்தை சேர்ந்த பட்லர் அணிக்கு திரும்பியுள்ளார். அவரது வருகை ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.

ஐ.பி.எல். அரங்கில் இவ்விரு அணிகளும் 19 முறை மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் வெற்றியும், பஞ்சாப் அணி 09 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.