சர்ச்சைக்குரிய நாகோர்னோ - கராபெக் பிராந்தியத்தில் ஆசிய நாடுகளான ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையே மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த மோதலில் குறைந்தது ஒரு அசர்பைஜான் ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அசர்பைஜான் வான் மற்றும் பீரங்கி தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ள ஆர்மீனியா, இராணுவச் சட்டத்தையும் மொத்த இராணுவ அணி திரட்டலுக்கும் அழைப்பு விடுத்தது.

இரு நாடுகளுக்கிடையிலான நீண்டாகல மோதல்களின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

ஆர்மீனியா குற்றச்சாட்டு

பிராந்திய தலைநகர் ஸ்டெபனகெர்ட் உள்ளிட்ட பொதுமக்கள் குடியேற்றங்கள் மீதான தாக்குதல் அந் நாட்டு நேரப்படி 08:10 மணிக்கு (04:10 GMT) தொடங்கியதாக ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் மூன்று ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அசர்பைஜான் ஷெல் தாக்குதலினால் ஆர்மீனியாவில் பெண்ணொருவரும் குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளதாகவும், ஏனைய உயிரிழப்புகள்  தொடர்பான மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாகவும்  ஆர்மீனியா மனித உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர். 

இதனிடையே அந் நாட்டுப் பிரதமர் நிகோல் பாஷினியன் ஒரு அறிக்கையில் "எங்கள் புனித தாயகத்தை பாதுகாக்க தயாராகுங்கள்"  எனக் கூறி இராணுவ அணத் திரட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

அசர்பைஜான் குற்றச்சாட்டு

அசர்பைஜான் மோதலை ஆரம்பிக்க ஆர்மீனியா தான் காரணம் எனக் கூறி குற்றம் சாட்டியுள்ளது.

பல கிராமங்களின் தீவிர ஷெல் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர், மேலும் உள்கட்டமைப்புக்கு கடுமையான சேதம் ஏற்பட்டது என்று அசர்பைஜான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"ஆர்மீனியாவின் ஆயுதப் படைகளின் போர் நடவடிக்கைகளை நசுக்குவதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முழு முன்னணியில் எங்கள் இராணுவத்தினர் எதிர் தாக்குதலை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளது.

ரஷ்யாவின் தலையீடு

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக இரு நாடுகளுக்கும் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்ததுடன், பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது.

ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் ஆகிய இரண்டும் சோவியத் ஒன்றியம் சரிவதற்கு முன்னர் (1991) சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் கீழிருந்த நாடுகளாகும்.

இது இவ்வாறிருக்க நான்கு தசாப்தங்களாக அவர்கள் நாகோர்னோ-கராபெக் பிராந்தியம் காரணமாக தீர்க்கப்படாத மோதலில் சிக்கியுள்ளனர்.

இது அசர்பைஜானின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆர்மீனிய இனத்தினரால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஜூலை மாதம் நடந்த எல்லை மோதலில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். இது அசர்பைஜான் தலைநகர் பாகுவில் பல ஆண்டுகளாக மிகப்பெரிய மக்கள் ஆர்ப்பாட்டத்தைத் தூண்டியது, முழு அணிதிரட்டலுக்கும் இப்பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்கும் அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.