(செ.தேன்மொழி)

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்லும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை மீண்டும் இருண்ட யுகத்திற்கே செல்லும். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை ஏனைய நாடுகளுக்கு மத்தியில் தலைக்குனிய வேண்டி சூழ்நிலையே ஏற்பட்டிருந்தது. ஆனால் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அதில் மாற்றம் ஏற்பட்டது. 

இந்நிலையில் சர்வாதிகார பண்புகளைக் கொண்ட 20 ஆவது  திருத்தத்தை நிறைவேற்றி மீண்டும் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

20 ஆவது திருத்தத்தின் ஊடாக சட்டத்துறைக்கு சவால் ஏற்படும் ஆபத்துள்ளது. அதேபோல் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளுக்கும் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. 19 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களின் போதே வன்முறைகள் குறைந்த சாதாரண தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் இத்தகைய சாதாரண தேர்தல் ஒன்றை எதிர்பார்க்க முடியுமா?

தற்போது காடழிப்புகள் மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலை என்பன அதிகரித்துள்ளன. அரசாங்கம் 20 ஆவது அரசிலமைப்பு திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதைப் போன்று இந்த விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். அதுமாத்திரமின்றி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலரது தொழில்வாய்ப்புகள் இல்லாமல் போயுள்ளது. இவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி அவர்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.