-ஹரிகரன்

1980களில் அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் பனிப்போர் தீவிரமாக இருந்த காலகட்டத்தில்,  வெளிவந்த ஹொலிவூட் தயாரிப்பு போர்ப் படங்களில் ரம்போ (Rambo) முக்கியமானது.

Everything You Ever Wanted to Know About 'Rambo': A Retrospective

1982இல் First Blood என்ற பெயரிலும், 1985இல் Rambo: First Blood Part II என்ற பெயரிலும், 1988இல்Rambo III என்ற பெயரிலும், 2008இல் Rambo என்ற பெயரிலும், சில்வெஸ்டர் ஸ்ரோலனை கதாநாயகனாக கொண்ட ரம்போ படங்கள் வெளியாகின.

அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதற்காக, வெளிநாடுகளில் தனிநபராக போராடும் கதாபாத்திரத்தில் சில்வெஸ்டர் ஸ்ரோலன் இந்தப் படங்களில் நடித்திருந்தார்.

அமெரிக்காவுக்கு சவாலாக இருந்த வியட்னாம், ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற  நாடுகளில், இந்த வீரசாகசங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தன.

பனிப்போர் காலத்தில் இந்தப் படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.

இந்த ரம்போ படங்களின் வரிசையில் கடைசி படம், 2019ஆம் ஆண்டு, Rambo: Last Blood  என்ற பெயரில் வெளியானது. ஆனால், அது பெரிதாக எடுபடவில்லை. தோல்வியாக அமைந்தது.

ரம்போ திரைப்படங்கள் , அமெரிக்காவின் நலன்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, எங்கெல்லாம் அமெரிக்க நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமோ அங்கெல்லாம், அமெரிக்கா தனது படைகளையோ, இரகசிய போர் வீரர்களைக் கொண்டோ அதனைப் பாதுகாக்கும் என்ற செய்தியை உலகத்துக்கு எடுத்துக் கூறியது.

இப்போது. ரம்போ பாணியிலான திரைப்படங்களை சீனாவும் வெளியிடத் தொடங்கியிருக்கிறது.

2015ஆம் ஆண்டு wolf warrior ( ஓநாய் வீரன்) என்ற பெயரில் முதலாவது படம் வெளியானது.

போதைப்பொருள் தொழிற்சாலை ஒன்றை சீன மக்கள் இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவு தாக்கியழிக்கிறது.

அந்த நடவடிக்கையில் போதைப்பொருள் கும்பலின் தலைவனை சிறப்புப்படைப் பிரிவின் சினப்பர் வீரர் Leng Feng சுட்டுக் கொன்று விடுகிறார்.

அவரை அழிக்க வெளிநாட்டில் இருந்து அமெரிக்க கடற்படையின் சீல் சிறப்பு படைப்பிரிவின் பணியாற்றி ஓய்வுபெற்ற 'Tom Cat' தலைமையிலான கூலிப்படையை சீனாவுக்கு அனுப்புகிறார் அவரது சகோதரர்.

Wolf Warrior - Trailer - YouTube

அங்கு நடக்கின்ற சண்டைகளையும்,  wolf warriors என்ற சீன சிறப்புப் படைப்பிரிவு வீரர்களின் சாகசங்களையும் வெளிப்படுத்துகிறது wolf warrior திரைப்படம்.

அதன் இரண்டாவது பாகம், Wolf Warrior 2, என்ற பெயரில், 2017ஆம் ஆண்டு வெளியாகியது.

Wolf Warrior  படத்தின் கதாநாயகனான Leng Feng ஓய்வுக்காக ஆபிரிக்காவுக்குச் சென்றிருந்த போது, அங்கு சீனாவின் நலன்கள் பாதிக்கப்படும் கட்டத்தில், சீனர்களை மீட்கும் பணியில் அவர் களமிறங்குகிறார்.

ரம்போ பாணியில், சீனாவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது, சீன வீரர்கள் துணிச்சலான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்பதை Wolf Warrior 2 வெளிப்படுத்துகிறது.

அமெரிக்காவுக்குப் போட்டியாக, சீனா தன்னை ஒரு சர்வதேச சக்தியாக மாற்றிக் கொள்வதற்கான எண்ணத்தை எல்லா வழிகளிலும், வெளிப்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டம் தான் Wolf Warrior படங்கள்.

இந்தப் படங்கள் வெளியாகிய பின்னர், wolf warrior diplomacy  (ஓநாய் வீரன் இராஜதந்திரம்) என்ற புதியதொரு பதம் அறிமுகமாகியிருக்கிறது.

சீனாவின் ஆக்ரோசமான இராஜதந்திர அணுகுமுறையையே "wolf warrior" diplomacy என்று அழைக்கப்படுகிறது.

சீன அரசு ஊடகங்களும், மேற்கு நாடுகளின் வெளியீடுகளும் இப்போது ஓநாய் வீரன் இராஜதந்திரம் குறித்து செய்திகளில் குறிப்பிடுகின்றன.

கடந்த பல தசாப்தங்களாக வெளிநாடுகளில் பணியாற்றும் சீன இராஜதந்திரிகள் சாதுவானவர்களாகவே இருந்தனர். அவ்வாறே செயற்பட்டனர்.

அவர்கள் நீண்ட அறிக்கைகளையே அதிகளவில் வெளியிடுவார்கள். அதனை இலகுவாக புரிந்து கொள்வது கடினம். ஆனால், இப்போது சீனாவின் ஓநாய் வீரன் இராஜதந்திரிகள் அவ்வாறில்லை. 

அவர்கள், நீண்ட, வாய்மொழி அறிக்கைகளுக்கு பதிலாக, ருவிட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களின் மூலம்,  சீனா அல்லது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மீதான எந்தவொரு விமர்சனங்களுக்கும் நேரடியாக பதிலடி கொடுக்கிறார்கள்

பாகிஸ்தானில் உள்ள சீனத் தூதரகத்தில் ஆலோசகராக இருந்த Zhao Lijian, ட்விட்டரில் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான தாக்குதலை தொடங்கிய போது -2019 ஜூலை மாதம் மாதம் தான், இந்த ஓநாய் வீரன் இராஜதந்திரம் அறிமுகமானது.

அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் ஓநாய் வீரன் இராஜதந்திரத்தை அறிமுகப்படுத்திய Zhao Lijian, இப்போது சீன வெளிவிவகார அமைச்சின் மூன்று பேச்சாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

இவரது மேலதிகாரியாக இருக்கும்,  சீன வெளிவிவகார அமைச்சின், தகவல் திணைக்கள பணிப்பாளர்  Hua Chunying 2019ஆம் ஆண்டு ஒக்ரோபரில் தான் ருவிட்டருக்குள் நுழைந்தார்.

ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் அவரை 5 இலட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

சீனாவின் ஓநாய் வீரன் இராஜதந்திரம் எந்தளவுக்கு விரிவடைந்து செல்கிறது என்பதற்கு இவை சில உதாரணங்கள்.

சீனாவின் இந்த ஓநாய் வீரன் இராஜதந்திரம், இந்தோ- பசுபிக் உள்ளிட்ட உலகம் முழுவதற்கும் சீனாவின் நலன்களை உறுதிப்படுத்துவதை, வலுப்படுத்துவதை அடிப்படையாக கொண்டது.

சீனாவின் ஒட்டுமொத்த ஓநாய் வீரன் இராஜதந்திரமும், அமெரிக்காவையே இலக்கு வைக்கிறது.

ஆனால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், சீனாவின் ஆதிக்க விரிவாக்கம், இந்தியாவின் நலன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதாக மாறியுள்ளது.

China's assertiveness and the rise of 'Wolf Warrior' diplomacy | The  Canberra Times | Canberra, ACT

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் படைபல ரீதியாக மாத்திரமன்றி, பொருளாதார ரீதியாகவும் வலுவடைந்து வருவதை, இந்தியா தனது நலன்களுக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கிறது.

குறிப்பாக இலங்கையில் சீனா துறைமுக நகர கட்டுமானத்தில் முதலீடு செய்வதையும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ளதையும், இந்தியா இலகுவான விடயங்களாக பார்க்கவில்லை.

சீனாவின் கடன்பொறி இராஜதந்திரம் இலங்கையை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருப்பதை இந்தியா அச்சத்துடன் பார்க்கிறது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீன மேலாதிக்கம் வளர்ந்து வரும் சூழலை, இந்தியா மாத்திரமன்றி, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளும் விரும்பவில்லை.

அது நீண்டகால நோக்கில் தமது நாடுகளின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்குமான அச்சுறுத்தலாக மாறலாம் என்று இந்த நாடுகள் கருதுகின்றன.

இவ்வாறான நிலையில் தான், அண்மைக்காலமாக ஆக்ரோசமடைந்துள்ள சீனாவின் ஓநாய் வீரன் இராஜதந்திரத்துடன், இந்தியாவும் முட்டி மோதத் தொடங்கியிருக்கிறது.

ஜப்பானுடன் இந்தியா இணைந்து கொண்டு சீனாவை முறியடிப்பதற்கான பல்வேறு வியூகங்களை வகுக்கிறது.

அண்மையில் ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட, இராணுவ விநியோக வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான உடன்பாடு அதில் ஒன்று.

இதன்படி இரண்டு நாடுகளும், தமது படைகளுக்கான விநியோக வசதிகளை  மற்ற நாட்டில் பெற்றுக் கொள்ள முடியும்.

இத்தகைய உடன்பாட்டை அமெரிக்கா, பிரான்ஸ், அவுஸ்ரேலியா, தென்கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் செய்துள்ள நிலையில், ஆறாவதாக ஜப்பானுடன் கையெழுத்திட்டுள்ளது.

அடுத்ததாக பிரித்தானியா மற்றும் ரஷ்யாவுடன் கையெழுத்திடவுள்ளது இந்தியா.

ஜப்பானுடன் இராணுவ விநியோக வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான உடன்பாட்டில் இந்தியா கையெழுத்திட்டுள்ள அதேவேளை, இந்த இரண்டு நாடுகளும், இணைந்து சீனாவை எதிர்கொள்வதில் கூட்டாகச் செயற்பட ஆரம்பித்துள்ளன.

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, மியான்மார், பங்களாதேஷ் ஆகியன சீனாவின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன.

இவ்வாறான நிலையில், இந்த நாடுகளுடன் நெருங்கிச் செயற்படுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் இணங்கியிருக்கின்றன.

முதல்கட்டமாக இலங்கையில் களமிறங்கியிருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் கூறியிருந்தார்.

இந்த இணை இப்போது தான் ஆரம்ப நிலையில் செயற்படத் தொடங்கியிருக்கிறது. இலங்கையில் தான் இது வேலையைத் ஆரம்பித்திருக்கிறது,

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இந்தியாவின் வளையத்தை விட்டு வெளியேற முடியாமல், கொழும்பு திணறிக் கொண்டிருக்கிறது.

பொருளாதார ரீதியாக இலங்கையை மடக்குதல் இந்த இணையின் முக்கிய இலக்காக இருக்கும்.

அது கிழக்கு கொள்கலன் முனையமாக இருக்கக் கூடும் என்பதில் சந்தேகமில்லை.