(இராஜதுரை ஹஷான்)
அனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியலமைப்பில்   உள்வாங்கப்படும். வரலாற்று ரீதியில் இடம் பெற்ற தவறுகள்  அனைத்தும் புதிய அரசியமைப்பு திருத்தத்தின் ஊடாக திருத்திக்கொள்ளப்படும்.  தமிழ்-முஸ்லிம்  மக்களின் அரசியல் உரிமைகளுக்கு  தொடர்ந்து முன்னுரிமை வழங்குவோம் என நீர்வழங்கள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார  தெரிவித்தார்.

புதிய அரசியமைப்பு, 20 ஆவது திருத்தம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

 அவர்மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  பிரதான இரு தேசிய தேர்தல்களில்  நாட்டு மக்களுக்கு பல்வேறு  வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.    அரசியமைப்பின் 19 ஆவது திருத்தம் நீக்கம், நாட்டுக்கு பொருந்தும் வகையிலான புதிய  அரசியமைப்பு உருவாக்கம் ஆகியவை  வாக்குறுதிகளில் பிரதானவையாக காணப்பட்டது.   அரசியமைப்பினை  திருத்தவும், புதிய அரசியமைப்பு உருவாக்கத்திற்கும் பெரும்பான்மை  பலம் அவசியம் என்பதற்காகவே மக்கள்  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளார்கள்.

 அரசியமைப்பின்  20 ஆவது திருத்தம்  தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வர்த்தமானியில் வெளியாகியுள்ள  சட்ட மூல வரைபு  உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அவ்விடயம் தொடர்பில்  கருத்து தெரிவிப்பது ஏற்படையது அல்ல. புதிய அரசியமைப்பு உருவாக்கம் குறித்து அரசாங்கம்  அதிக அவதானம் செலுத்தியுள்ளது.

புதிய அரசியமைப்பு நடப்பு அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்காக உருவாக்க கூடாது என்பதில் அவதானமாக உள்ளோம். பல்லின சமூகம் வாழும்  நாட்டில் அனைத்து இனத்தவர்களின்  அரசியல் அபிலாசைகளும் புதிய அரசியமைப்பு  உருவாக்கத்தில்   உள்வாங்கப்படும் என்றார்.